வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையை திமுக மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையை மேற்கொள்ளும் திமுக பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையை முதலில் தொடங்கிய திமுக, பிப்ரவரி 16,17,18 ஆம் தேதிகளில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக மிகப்பிரமாண்டமாக கூட்டங்களை நடத்தியுள்ளது. நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளதுடன், மக்களிடம் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக ‘இல்லந்தோறும் ஒலிக்கும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதே சமயம் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், நேற்று முதல் (பிப்ரவரி 26) ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது திமுக. அதுதொடர்பாக பிப்ரவரி 24, 25 ஆகிய நாட்களில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தனித்தனியாக, தொகுதிப்பார்வையாளர்கள், BLA-2, பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளைக் கொண்டு ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரை செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும்.” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் 23-02-2024 அன்று காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்பேரில், தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்ரவரி 26) முதல் திமுகவின் பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து சில நிமிடங்கள் விளக்குகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதனோடு மறைமுகக் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வை முழுமையாக வீழ்த்தி, கழகத் தலைவரின் குரல் டெல்லியிலும் நிறைவேறுவதை உறுதிசெய்து வருகின்றனர்.
முதல் நாளான நேற்று (பிப்ரவரி 26) மணப்பாறை பகுதியில் உள்ள வீடுகள்தோறும் சென்று பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் நமது அரசின் சாதனைகளை விளக்கிக் கூறினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர் கோவூர் வடக்கு மாட வீதியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், விருகம்பாக்கம் அன்னை சத்யா நகர் பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆரணியில் அமைச்சர் மஸ்தானும் பரப்புரை மேற்கொண்டனர். மன்னார்குடி பகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மக்களுடன் கலந்துரையாடி பரப்புரை மேற்கொண்டார்.
தங்கள் இல்லங்களுக்கு வந்து பரப்புரை மேற்கொள்ளும் திமுக நிர்வாகிகள், பூத் கமிட்டியினரின் பரப்புரையை நேரம் ஒதுக்கி ஆர்வமுடன் கேட்கும் மக்கள், அவர்களிடம் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்” ஸ்டிக்கர்களையும் பெற்று தங்கள் இல்லங்களின் முன்பாக ஒட்டி வருகின்றனர். இரண்டாம் நாளாக இன்று மாலையும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஒவ்வொரு இல்லங்களுக்கும் செல்லும் திமுகவினர் அரசின் சாதனைகளை விளக்கவுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண