மதத்தைப் போற்றும் கட்சியில் இணைவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்

திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுனர்களில் ஒருவர். மகிழ்மதி என்கிற தனியார் நிறுவனத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மேலும் மணிப்பூர் , இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஊட்டச்சத்து குறைபாட்டால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அரசியல் ரீதியாக சமத்துவத்தை முன்வைத்தே தனது கருத்துக்களை பொது தளங்களில் பேசி வருபவர். பெண்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதால் தான் சனாதன தர்மத்தை மறுக்கிறேன் என்று கடந்த ஆண்டு இவர் தெரிவித்த கருத்து கவனம் பெற்றது.

பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போகிறாரா திவ்யா?

அரசியலில் தனது ஈடுபாடு இருப்பதாகவும் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் பல்வேறு முறை வெளிப்படுத்தி இருக்கிறார் திவ்யா. இப்படியான நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இருந்து அவருக்கு அழைப்பு வந்ததாகவும் பாஜகவில் அவர் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

மதத்தைப் போற்றும் கட்சியில் இணைய விருப்பமில்லை

வணக்கம்! எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என்று சில பத்திரிக்கை நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். அதற்குப் பிறகு எல்லோரும் என்னைக் கேட்கும் கேள்விகள் "நீங்கள் எம்.பி.ஆவதற்காக அரசியலுக்கு வருகிறீர்களா? ராஜ்யசபா எம்.பி ஆகனும்கற ஆசை இருக்கா? மந்திரி பதவி மேல் ஆர்வம் உள்ளதா? சத்யராஜ் சார் உங்களுக்குப் பிரச்சாரம் செய்வாரா?" இப்படிப் பல கேள்விகள்.

நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெல்வதற்காகவோ அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கவில்லை. மக்களுக்காக வேலை செய்வதற்காகத் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன். நான் களப்பணிகள் செய்ய ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிறது. ‘மகிழ்மதி இயக்கம்’ என்ற அமைப்பை மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்தேன். அந்த அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம். நான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மதத்தைப் போற்றும் கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம் இல்லை. எந்தக் கட்சியுடன் இணையப் போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன். புரட்சித் தமிழன், தோழர் சத்யராஜின் மகளாகவும், ஒரு தமிழ் மகளாகவும், தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன். நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.