இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து காலமானார்.

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே பசுமலை கிராமத்தை சேர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. எஸ்.ஜே. சூர்யாவின் நெருங்கிய நண்பரான மாரிமுத்து வாலி படத்தில் முதன் முதலில் துணை நடிகராக தோன்றினார்.

இயக்குனர் மிஷ்கின் தனது யுத்தம் செய் திரைப்படத்தில் மாரிமுத்துவை முழு நடிகராக அறிமுகம் செய்தார். பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் அண்மையில் கமல்ஹாசனின் இந்தியன்- 2 திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் “எதிர்நீச்சல்” நாடகம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. ‘ஆதி குணசேகரன்’ என்ற கதாபாத்திரத்தின் மூலமாக தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

வலைதளங்களில் அவரது வீடியோக்களையும் புகைப்படங்களையும் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். அவரது “ஏய் இந்தாம்மா” என்ற டயலாக் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது.

ஆசை என்ற படத்தில் உதவி இயக்குனராகவும், மேலும் 20 க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில் 56 வயதான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

இன்று காலை எதிர்நீச்சல் சீரியலின் டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது நெஞ்சு வலியால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சின்னத்திரை பிரபலமான நடிகர் மாரிமுத்துவின் மரணத்திற்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.