இரண்டு பாகங்களாக உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் 100 கோடி வரை சம்பளமாக பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜாவாக தனுஷ்

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் தொடங்கியுள்ளன. இளையராஜாவாக தனுஷ் இந்தப் படத்தில் நடிக்கிறார். கேப்டன் மில்லர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மார்ச் மாத தொடக்கத்தில் இப்படத்தின் அறிவிப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.

கமல்ஹாசன் திரைக்கதை

இப்படத்திற்கு உலகநாயகமன் கமல்ஹாசன் திரைக்கதை எழுதுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. தற்போது மக்களவை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் கமல்ஹாசன் தனது எல்லா திரைப்பட வேலைகளில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பிற்கு அவர் செல்ல முடியாத காரணத்தினால் அப்படத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

அதேபோல் தற்போது இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் ஒரு முக்கியமான திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. கமல் தேர்தல் வேலைகளை முடித்து வருவது வரை இப்படத்திற்கான திரைக்கதையை அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து தனுஷ் எழுத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பவர் பாண்டி தற்போது ராயன் ஆகிய ஆகிய இரண்டு படங்களில் தனுஷ் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் அனுபவம் தனுஷுக்கு இருபதால் இந்தப் படத்தில் அவரது கண்ணோட்டத்தில் இளையராஜாவை பார்ப்பது புதுமையான அனுபவமாக இருக்கும். மேலும் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

தனுஷின் சம்பளம்

இப்படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் பெரிய தொகை ஒன்றை சம்பளமாக பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு பாகத்திற்கு 50 கோடி வீதம் இரண்டு பாகங்களுக்கு 100 கோடி சம்பளமாக தனுஷ் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் இருந்து தனுஷின் மார்கெட் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கலாம். தமிழ், இந்தி , ஆங்கிலம் என அனைத்து மொழி படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வந்தாலும் தனுஷின் மார்கெட் பெரியளவில் மாற்றம் இல்லாமல் இருந்தது. தற்போது இப்படம் அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.

ராயன்

தனுஷின் 50 படமாக உருவாகியுள்ள ராயன் தற்போது போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகளில் உள்ளது. அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, செல்வராகவன் , பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், சரவணன் , சந்தீப் கிஷம், காலிதாஸ் ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் மே மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது.