Metro Train : மெட்ரோ பணிக்காக சென்னையில் 2 முக்கிய மேம்பாலங்களான அடையாறு, அஜந்தா பாலங்கள் இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ராயப்பேட்டை அஜந்தா பாலத்தை இடிக்கக் கூடிய பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் இடிப்பு பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் முதல் ராயப்பேட்டையை இணைக்க கூடிய அஜந்தா மேம்பாலம் இடிக்கப்படுவதால் அவ்வை சண்முகம் சாலை வழியாக பேருந்துகள் மற்றும் வாகனங்கள் திருப்பிவிடப்படுகின்றன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதற்கட்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில், ஊதா வழித்தடமான மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கி.மீ. வழித்தடத்தில் 19 உயர்நிலை பாதையும் 28 சுரங்கப் பாதையும் அமைய உள்ளது. அதன்படி மாதவரம் பால் பண்ணையில் இருந்து தரமணி வரை சுரங்கப்பாதையாகவும் நேரு நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சிறுசேரி சிப்காட் ரயில் நிலையம் வரை உயர்மட்ட பாதையாகவும் அமைகிறது.
இந்த வழித்தடத்தில் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலம் மற்றும் அடையாறு திரு.வி.க பாலத்தை அடுத்து அடையாறு மேம்பாலம் அமைந்துள்ள இடத்திலே மெட்ரோ ரயில் நிலையங்கள் வருவதால் இந்த இரண்டு பாலங்களும் மெட்ரோ பணிகளுக்காக இடிக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.
முதற்கட்டமாக ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலம் இடிப்பதற்கான வேலை ஞாயிற்றுக்கிழமை பூஜையுடன் தொடங்கியது. இன்று முதற்கட்ட பணியாக மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியதால் அப்பகுதியில் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அஜந்தா மேம்பால இடிப்ப பணிகள் நிறைவு பெற ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் பயணிகள் யாரும் உள்ளே வராத வகையில் பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் மற்றும் ராயப்பேட்டையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அஜந்தா பாலம் இடிக்கப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேருந்துகள் அவ்வை சண்முகம் சாலை வழியாகவும் வாகனங்கள் சுற்றுவட்டார சாலைகள் வழியாக செல்ல காவல்துறையினரால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.