Pragati Maidan tunnel: பிரகதி மைதான சுரங்கப்பாதைய பழுதுபார்ப்பது சாத்தியமில்லை, முற்றிலும் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரகதி மைதான சுரங்கப்பாதை:
டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 777 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 1.4 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சாலையானது, டெல்லியின் கிழக்கு பகுதிகள் மற்றும் சேட்டிலைட் சிட்டிகளான நொய்டா, காசியாபாத் ஆகியவற்றை எளிமையாக இணைத்தது. தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் என, உலக தரத்தில் இந்த சுரங்கப் பாதை கட்டமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பிரகதி மைதானம் சுரங்கப்பாதை பாதிப்பு:
இந்நிலையில், கடந்த ஆண்டு நீர் தேங்கியதன் காரணமாக சுரங்கப்பாதை பலமுறை மூடப்பட்டது. நகரத்தில் மிதமான மற்றும் அதிக மழை பெய்யும் போதெல்லாம் சுரங்கப்பாதைக்குள் நீர் தேங்கி, பல நாட்கள் பயன்பாட்டிலேயே இல்லாமல் இருந்தது. இந்நிலையில், சுரங்கச் சாலையில் தண்ணீர் தேக்கம், விரிசல் என பயணிகளுக்கு ஆபத்தானதாக அந்த சாலை மாறியுள்ளது. 100 ஆண்டுகள் ஆயுட்காலகத்தை கொண்டிருக்கும் என கட்டுமான நிறுவனம் உறுதியளித்த நிலையில், கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே பிரகதி மைதானம் சுரங்கப்பாதை மோசமாக சேதமடைந்துள்ளது.
பழுதுபார்க்க முடியாது – அதிகாரிகள் தகவல்:
இந்நிலையில் சுரங்கப்பாதையில் டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பாதிப்பு தொடர்பாக பேசிய அவர்கள் “பல சுரங்கப்பாதைகளில் நீர் கசிவு சிறிதளவு இருக்கும். ஆனால், இந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்ட கசிவை கட்டுமான நிறுவனம் சரி செய்யவில்லை. தொடர்ந்து நீர் கசிவு அதிகரித்ததால் கட்டுமானத்தில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது. மோசமான வடிகால் காரணமாக நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது, இது கட்டுமானத்தை மேலும் பலவீனப்படுத்துகிறது. பராமரிப்பில் நிலவிய அலட்சியம் கட்டமைப்பில் பெரிய விரிசல்களுக்கு வழிவகுத்தது, அதன் காரணமாக இப்போது முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது . இந்த சுரங்கப்பாதை தற்போது பயணிகளுக்கு பாதுகாப்பானது அல்ல. பழுது பார்ப்பது சாத்தியமில்லைம், முற்றிலும் சீரமைக்க வேண்டும்” என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கட்டுமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் – பதிலடி:
பிரகதி மைதான சுரங்கச் சாலை கட்டுமான பணிகளை மேற்கொண்ட எல்&டி நிறுவனத்திற்கு டெல்லி பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 2019ம் ஆண்டிற்குள் முடித்து தரப்படும் என கூறப்பட்ட சுரங்கச் சாலை 2022ம் ஆண்டு தான் இறுதி வடிவம் பெற்றது. இதன்படி ஏற்பட்ட கால தாதமதம் மற்றும் பராமரிப்பு பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தால் பிரகதி மைதான சுரங்கச் சாலை தற்போது சேதமடைந்துள்ளது. அதோடு, வடிவமைப்பிலும் பல குறைகள் இருக்கின்றன. இதுதொடர்பாக 15 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நிறுவனம் தொடர்பாக அவதூறு கருத்துகளை பரப்புவதாக, 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு எல்&டி நிறுவனம் டெல்லி பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே, பிரகதி மைதான சுரங்கச் சாலையை திறந்து வைத்து, பிரதமர் மோடி வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் காண