இஸ்ரேலில் சைபர் தாக்குதலில் இணையதள சேவைகள் பாதிக்கப்படக் கூடும் என அந்நாட்டின் தேசிய இணையதள இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலில் நடைபெற இசை நிகழ்ச்சியை குறிவைத்து தாக்குதலானது தொடங்கியது. இதற்கு பதிலடியாக காஸா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். இதனிடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் அடிப்படையில் இவர்களில் சிலரை மீட்டுள்ளது. மீதமிருப்பவர்களை விரைவில் மீட்போம் என இஸ்ரேல் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி பூண்டுள்ளது தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களாக இருநாடுகளிடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக இணையதள தாக்குதல் நடத்தப்பட கூடும் என இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டின் அமைப்புகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெறலாம் என தேசிய இணையதள இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சைபர் தாக்குதல்

இதற்கிடையில் ஈரான் நாட்டின் ஜெருசேலம் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் இந்த தினம் கொண்டாடப்படும். இந்த தினத்தில் #OpJesusalam என்ற ஹேஸ்டேக் கீழ் அச்சுறுத்தலை ஏற்படுத்த அந்நாட்டின் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நாளில் இஸ்ரேல் அரசுக்கு எதிராக சைபர் தாக்குதலை நடத்த உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு விடுப்பது வழக்கம். அதன்படி இஸ்ரேலுக்கு எதிரான இணையதள தாக்குதலுக்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி இஸ்ரேல் அரசு எச்சரித்துள்ளது. மேலும் பொய்யான செய்திகள் பரவக்கூடும் என்பதால் மக்கள் கவனமுடன் செயல்படுமாறு இஸ்ரேல் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.