ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் சீசன் 17 கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் லீக் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்தவகையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அதேபோல், இதுவரை நடந்து முடிந்துள்ள 6 லீக் போட்டிகளிலும் ஹோம் மைதானத்தில் விளையாடிய அணிகள்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இன்று (மார்ச் 26) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
அதிரடி காட்டிய ருதுராஜ் – ரச்சின் ஜோடி:
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சென்னை சூப்பர் கிங் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார்கள். இருவரும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 62 ரன்களை குவித்தனர். அப்போது அதிரடியாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா ரஷீத் கான் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்தவகையில் 20 பந்துகள் களத்தில் நின்ற ரச்சின் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அதேபோல், 6 பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். அதன்படி மொத்தம் 46 ரன்களை குவித்தார். அவரது விக்கெட்டுக்கு பிறகு களம் இறங்கினார் அஜிங்யா ரஹானே. 12 பந்துகள் களத்தில் நின்ற அவர் 12 ரன்கள் எடுத்து சாய் கிஷோர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
அரைசதம் விளாசிய ஷிவம் துபே:
அப்போது களம் இறங்கிய ஷிவம் துபே முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்டார். அதிரடியாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது விக்கெட்டை பறிகொடுத்தார். அந்தவகையில், 36 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 46 ரன்களை குவித்தார்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஷிவம் துபேவுடன் ஜோடி சேர்ந்தார் டேரில் மிட்செல். இதனிடையே மொத்தம் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார் துபே. அந்தவகையில் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் தன்னுடைய முதல் சிக்ஸரை பதிவு செய்தார் ஷிவம் துபே. 22 பந்துகள் 2 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என 51 ரன்களை குவித்து அரைசதத்தை பதிவு செய்தார்.
அப்போது ரஷீத் கான் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஜடேஜா அல்லது தோனி களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களால் செல்லமாக குட்டி ரெய்னா என்று அழைக்கப்படும் சமீர் ரிஸ்வி களம் இறங்கினார். களம் இறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்க விட்டார். அவர் 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். ஜடேஜா இரண்டு பந்துகளில் 7 ரன்கள் எடுக்க இவ்வாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி
மேலும் காண