தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் போதுமான அளவு ஒத்துழைப்பு இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுவது, ரூ. 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். அப்போது “தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசிடம் ஒத்துழைப்பு இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளை தாண்டி தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும்.” என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியில் இந்தக் கருத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,” தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. தி.மு.க.வைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டித் திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரயில் திட்டங்களுக்குத் தடையாக இருந்தோமா? ஒன்றிய அரசின் எந்தத் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தோம் என்பதைச் சொல்லட்டும். பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார் பிரதமர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பில்லாத பேச்சு

”நீட் தேர்வை எதிர்க்கிறோம். ஏழை மக்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்விச் சாலையில் தடைக்கல் எழுப்புகிறார்கள். அதை எதிர்க்கத்தான் செய்வோம். மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தோம். உழவர்களை, நிலத்தில் இருந்து விரட்டுவது அது. குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மையினர்க்கும் இலங்கைத் தமிழர்க்கும் எதிரானது. எதிர்க்கிறோம். எதை எதிர்க்கிறோமோ, அதை வெளிப்படையாகச் சொல்லி விட்டுத்தான் எதிர்க்கிறோம். ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடி அவர்களுக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.

தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு.

அவரது பாணியில் பா.ஜ.க.வே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களைத் தலைவர் கலைஞர் அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பா.ஜ.க.வுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பா.ஜ.க., வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன்.” என்று பிரதமரின் செயலுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், “பா.ஜ.க. அரசின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்களுக்கு நினைவூட்டும் கடமைதான் நமக்கு உண்டு. புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நாற்பதும் நமதே என்று சொல்லத்தக்க வகையில் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ‘இந்தியா’ கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிக் கட்சிகளை பா.ஜ.க. தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது. ” என்று கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுத்தியுள்ளார்.