Citizenship Amendment Act Likely To Be implemented From Next Month know more details here | CAA: நெருங்கும் தேர்தல்! பா.ஜ.க. கையில் எடுத்த அஸ்திரம்


ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய பாஜக அரசு அடுத்த மாதம் முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன?
பொதுவாக, வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடிமகன்களாக கருதப்படமாட்டார்கள். அப்படி குடியேறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். இதுதான் அன்றைய நிலை. ஆனால் 1955-ஆம் ஆண்டில், 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கிற வெளிநாட்டவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. 
எனினும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம்  குடியுரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு. அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும் கூட இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். அதாவது டிசம்பர் 31, 2014ஆம் ஆண்டுக்குள் குடியேறியவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.
ஆனால் இதே நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் அனுமதியில்லை. அதே போல இலங்கை வாழ் தமிழர்களுக்கும் அனுமதியில்லை என்று கூறப்பட்டது. இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
பாஜக கையில் எடுத்த அஸ்திரம்:
இன்னும் ஓரு மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், குடியுரிமை திருத்தம் சட்டத்தை தேர்தல் விவகாரமாக கையில் எடுத்துள்ளது பாஜக. இன்று அமல்படுத்தப்படும், நாளை அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர்கள் கூறி வரும் சூழலில், அடுத்த மாதம் முதல் குடியுரிமை திருத்தம் சட்டம் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
குடியுரிமையை பெறும் நோக்கில் பதிவு செய்வதற்காக ஆன்லைன் போர்டல் தயாராக உள்ளது என்றும் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சோதனை ஓட்டம் நடத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் குடியுரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய குடியுரிமை வழங்கும் அதிகாரம் ஒன்பது மாநிலங்களின் 30க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்துறைச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தான் உயிரோடு இருக்கும் வரை சட்டத்தை அமல்படுத்த விடமாட்டேன் என தெரிவித்தார்.
இதையும் படிக்க: Rajyashaba Election: மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் – என்ன நடந்தது?

மேலும் காண

Source link