இந்தாண்டு ஐரோப்பிய ஒன்றியம் உள்பட உலகம் முழுவதும் 64 நாடுகளில் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, உலக மக்கள் தொகையில் 49 சதவிகிதத்தினர் வாக்களிக்க காத்திருக்கின்றனர். இந்த தேர்தல்களை தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வாக்காளர்களை குழப்ப முயற்சி:
இந்த தகவலை வெளியிட்டிருப்பது உலகின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட். அறிவியல் அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அதன் சமீபத்திய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவு (AI) உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், தேர்தலை தீர்மானிக்க கூடிய அளவுக்கு ஏஐ வளர்ச்சி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, தென் கொரியா, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் ஏஐ மூலம் குழப்பம் ஏற்படுத்தி இடையூறு விளைவிக்க சீனா சதி திட்டம் தீட்டி வருவதாக மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீன அரசு ஆதரவு சைபர் குழுக்கள், வட கொரியாவின் உதவியுடன், 2024 இல் திட்டமிடப்பட்ட பல தேர்தல்களை குறிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல்களின் போது தங்கள் நலன்களுக்கு ஆதரவாக பொதுக் கருத்தைத் திசைதிருப்ப சமூக ஊடகங்கள் வழியாக AI உருவாக்கிய உள்ளடக்கத்தை (content) சீனா பயன்படுத்தக்கூடும்.
சீனாவின் சதி வேலை அம்பலம்:
உலகெங்கிலும், குறிப்பாக இந்தியா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் இந்த ஆண்டு முக்கிய தேர்தல்கள் நடைபெறுவதால், சீனா தனது நலன்களுக்கு பயனளிக்கும் வகையில் AI-உருவாக்கிய உள்ளடக்கத்தை பயன்படுத்தும் என தெரிய வந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் டீப்ஃபேக் வீடியோக்களை உருவாக்கி பொய்யான, தவறான தகவல்களை அரசியல் விளம்பரங்களாக சமூக வலைதளங்களில் வெளியிடுவது தேர்தல் காலத்தில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
நடைபெறாத ஒரு சம்பவத்தை நடைபெற்றது போல் காட்டி வாக்காளர்களை நம்ப வைப்பது தேர்தல் நேரத்தில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. வேட்பாளர்களின் பேச்சுகள், பல்வேறு பிரச்னைகள் குறித்த அவர்களின் நிலைப்பாடுகள், நடைபெறாத சம்பவங்களை நடைபெற்றதாக பொதுமக்களை தவறாக வழிநடத்துவது இத்தகைய செயல்களின் நோக்கமாக உள்ளன.
இந்த மாதிரியான தகவல்களை சரி பார்க்கவில்லை என்றால், சரியான வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாத நிலை வாக்காளர்களுக்கு ஏற்படும். இது ஜனநாயகத்தை மட்டுப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது, ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கின்ற போதிலும், காலப்போக்கில் தனது தொழில்நுட்பத்தின் மூலம் சீனா மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.
தாய்வான் அதிபர் தேர்தலின்போது, மக்களின் விருப்பங்களை தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா சோதனை முயற்சியில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண