தென்காசி மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.2 லட்சம் நிதியுதவி:
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம் மஜரா புன்னையாபுரத்தில் உள்ள பெரியபாலம் அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (28.1.2024) அதிகாலை சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், புளியங்குடி கிராமம். பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த போத்திராஜ் (வயது 32) த/பெ. மூக்கையா கோனார், வேல்மனோஜ் (வயது 30) த/பெ.கோபால், சுப்பிரமணியன் (வயது 29) த/பெ.பரமசிவன், கார்த்திக் (24) த/பெ.பட்டமுத்து, முத்தமிழ்செல்வன் (வயது 23) த/பெ.ராமமூர்த்தி, மனோ (வயது 19) த/பெ.மாரிச்சாமி ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள புன்னையாபுரத்தில் இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. அங்குள்ள கொல்லம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்புத்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புளியங்குடி சரக காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின்படி, இந்த விபத்தில் கார்த்திக், வேல், மனோஜ், சுப்பிரமணியன், மனோகரன், போத்திராஜ் ஆகிய 6 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த 6 பேரும் குற்றாலத்தில் குளித்து விட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தது போது விபத்து ஏற்பட்டது.
அப்போது தான், சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதனால், கொல்லம் – மதுரை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Railway Budget 2024: வருகிறது நவீன ரயில்கள்! ரயில்வே துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லுமா இடைக்கால பட்ஜெட்?
வரலாற்றில் முதன்முறை.. 9ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்..!