Cauvery Management: இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்.. முக்கிய பிரச்சினையை எழுப்ப கர்நாடகா திட்டம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வைக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி ஒழுங்காற்று குழு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டும், மேலாண்மை ஆணையம் டெல்லியை தலைமையிடமாக கொண்டும் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த மார்ச் 21 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. அதில் பெங்களூருவில் தாண்டவமாடும் குடிநீர் பற்றாக்குறையை போக்க காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். இதற்கு தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தமிழ்நாட்டுக்கு மாதத்துக்கு 2.8 டிஎம்சி வீதம் தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடகா அரசை ஒழுங்காற்று குழு கேட்டுகொண்டது.

இதற்கிடையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணியை கர்நாடகா அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க இதுதான் ஒரே வழி என அம்மாநில அரசு மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் நம்புகின்றது. இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 4 மாநில அதிகாரிகளுக்கும், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஆணைய செயல்பாட்டுக்கான நிதியும் கேட்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாகவும், மேகதாது அணை கட்டுவது அவசியம் பற்றியும் கர்நாடகா அரசு எடுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என உறுதியாக கர்நாடகா அரசு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: சொந்தமாக கட்சி இல்லை, சின்னம் இல்லை; ஆனாலும் ஓபிஎஸ்க்கு கிட்டுமா வெற்றி? களநிலவரம் என்ன?!

Source link