Chennai Highcourt: திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் மீதான வழக்குகள்:
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி மற்றும் பொன்முடி ஆகியோரை சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் தீர்ப்பளித்தன. இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களால் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
கோரிக்கையும், உச்சநீதிமன்ற உத்தரவும்:
தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5ம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என, சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதேநேரம், மறு ஆய்வு தொடர்பான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிகக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையின் முடிவில், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநாளில் மறு ஆய்வு வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்துப் பார்க்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் கேட்டுக் கொண்டார். அதையேற்று, வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
திமுகவிற்கு வந்த ஷாக்..!
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்றைய விசாரணை பட்டியலில் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் இடம் பெறவில்லை. இதன் மூலம், மறு-ஆய்வு வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிற்கு அனுமதி கிடைக்கவில்லையா? புதிய நீதிபதி யாரேனும் நியமிக்கப்படுவார்களா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்தநிலையில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று பிற்பகலில் கடைசி வழக்குகளாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இதன் மூலம் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேசே விசாரிக்கலாம் என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கிவிட்டார் என கருதப்படுகிறது. அதேநேரம், இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கக் கூடாது, என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த திமுகவினருக்கு இது அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
மேலும் காண