Budget 2024 finance minister nirmala sitharaman will submit in parliament today | Budget 2024: எகிறும் எதிர்பார்ப்புகள்..! வருமான வரியில் மாற்றமா?


Budget 2024: 2024-25 நிதியாண்டிற்கான மத்திய அரசின்  இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இடைக்கால பட்ஜெட்:
விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமயிலான அரசு இன்று தனது இரண்டாவது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதையொட்டி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
வருமான வரி உச்சவரம்பில் மாற்றமா?
இந்த இடைக்கால பட்ஜெட்டில்,  கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. ஆனால்,   நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் வெளியாக உள்ளது. அதேநேரம், தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு வாக்காளர்களை கவரும் விதமாக வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், எரிபொருட்களின் விலையை குறைப்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மக்களுக்கு நன்மை பயக்கும் சில அறிவிப்புகளும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நிலையில், அவரது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட உள்ள இரண்டாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் இன்று தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்று ஏற்கனவே 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆறாவதாக இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், 5 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை  முறியடிக்க உள்ளார்.
நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர்:
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நாட்டில் தொடர்ந்து ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெற உள்ளார். முன்னதாக,  இந்திய வரலாற்றில் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நபராக இருக்கிறார். அதாவது 1959 முதல் 1964 வரையிலான ஆட்சிக் காலத்தில்  5 முழு பட்ஜெட்டையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். அதோடு, 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து, நாட்டிலேயே அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார்.
 
 
 

மேலும் காண

Source link