Brazil President Lula da Silva says israel committing genocide against palestine civilians


காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
காசாவில் ருத்ரதாண்டவம் ஆடும் இஸ்ரேல்:
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 29,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா. இஸ்ரேல் மீது குற்றம் சுமத்திய அவர், காசாவில் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபாபாவில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உச்சி மாநாட்டு நேற்று நிறைவடைந்தது.
உச்சி மாநாட்டை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேசில் அதிபர் லூலா, “காசாவில் நடப்பது போர் அல்ல. அது, இனப்படுகொலை. ராணுவ வீரர்களுக்கு எதிராக ராணுவ வீரர்கள் நடத்தும் போர் அல்ல. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தயார் நிலையில் இருக்கும் ராணுவம் நடத்தும் போர்” என்றார்.
கொதித்தெழுந்த பிரேசில் அதிபர் லூலா:
பிரேசில் அதிபர் லூலாவின் கருத்துக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவர், வெட்கக்கேடான, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் விமர்சித்துள்ளார். மேலும், பிரேசில் தூதருக்கு விளக்கம் அளிக்கக் கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பாலஸ்தீன பகுதியான வெஸ்ட் பேங்க், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு இருக்கும் அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெஸ்ட் பேங்கில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருவதாகவும் இதை விட மோசமான நிலை ஏற்படலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.
4 மாதங்களாக நடந்து வரும் போரால் காசாவின் மொத்த மக்கள் தொகையில் 85 சதவிகிதம் பேர், அதாவது 24 லட்சம் பேர், தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பாலஸ்தீன மக்களில் பெரும்பான்மையானோர் முகாம்களில் வசிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்து வருகின்றனர். 
இதையும் படிக்க: முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து! நுபூர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நெதர்லாந்து அரசியல் தலைவர்!

மேலும் காண

Source link