நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்தது. வட மாநிலங்களைத் தொடர்ந்து, நாட்டின் பிற பகுதிகளில் கூட்டணியை பலப்படுத்த பாஜக தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.

பா.ஜ.க.வுக்கு அல்வா கொடுத்த நவீன் பட்நாயக்?

அந்த வகையில், ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்காக, இரு கட்சிகளின் தலைமையும் தங்கள் மூத்த தலைவர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல முடியாத வகையில் பிஜு ஜனதா தளம், பா.ஜ.க.வுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என ஒடிசா மாநில பாஜக தலைவர்கள் இருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தனக்கு எந்த தகவலும் தெரியாது என ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, அதே பாணியில் பதில் அளித்த ஒடிசா மாநில இணை பொறுப்பாளர் விஜய்பால் சிங் தோமர், "எங்களுக்குத் தெரிந்தவரை, தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தயாராகி வருகிறோம்.

முடிவாவதற்கு முன்பே முடிவுக்கு வந்த கூட்டணி:

கூட்டணி என வந்தால் எங்களைதான் முதலில் ஆலோசிப்பார்கள். தற்போது, அது போன்ற எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அனைத்து இடங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து டெல்லியில் மாநிலத் தலைமையுடன் நாங்கள் விவாதித்தோம். ஒடிசாவில் 147 தொகுதிகளில் 89க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். 16 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்" என்றார்.

கூட்டணி பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஒடிசா மாநில இணை பொறுப்பாளர், "அது தொடர்பான எந்த தகவலும் எனக்கு தெரியாது. கூட்டணி குறித்து செய்தி வெளியிடுபவர்களிடம் இதை கேளுங்கள்" என்றார்.

பிஜு ஜனதா தள கட்சியை சேர்ந்த 2 தலைவர்கள், டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. அதேபோல, கூட்டணியின் நன்மை தீமைகள் பற்றி பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் உடன் அதன் மூத்த தலைவர்கள் அவரின் வீட்டில் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.