Assam Cabinet: அசாம் மாநிலத்தில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான, 89 ஆண்டுகால சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இஸ்லாமிய திருமண சட்டம் ரத்து:
அசாம் மாநிலத்தில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு செய்வது தொடர்பான, 89 ஆண்டுகால சட்டத்தை ரத்து செய்ய மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மாநில சுற்றுலா அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா, “அசாமில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த பயணத்தின் மிக முக்கிய முடிவாக அசாம் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம், 1935 ஐ ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நடவடிக்கை என்பது அசாமில் இனி இந்தச் சட்டத்தின் கீழ் இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளை பதிவு செய்ய முடியாது. நம்மிடம் ஏற்கனவே ஒரு சிறப்பு திருமணச் சட்டம் உள்ளது. அனைத்து திருமணங்களும் அந்த விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என தெரிவித்தார்.
”குழந்தை திருமணங்கள் தடுக்கப்படும்”
மேலும், “அனுமதிக்கப்பட்ட வயதை எட்டாத சிறுவன் மற்றும் சிறுமிகளுக்கு திருமணங்களை செய்ய, இஸ்லாமிய சட்டம் பயன்படுத்தப்படுவது எங்கள் கவனத்திற்கு வந்தது. இதன் காரணமாக அந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் குழந்தை திருமணங்கள் தடுக்கப்படும். தற்போது வரை மாநிலத்தில் 94 பேர் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்து வருகின்றனர். அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் 94 பேருக்கும் தலா 2 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்” என அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார்.
விரைவில் பொது சிவில் சட்டம்:
அண்மையில் இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, “நாங்கள் பலதார மணத்தை தடை செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இதனிடையே, உத்தராகண்ட் பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. நாங்கள் இப்போது இரண்டு சிக்கல்களையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம், இதன் மூலம் வலுவான சட்டத்தை உருவாக்க முடியும்.
பலதார மணம் மற்றும் பொது சிவில் சட்டம் ஆகிய இரண்டையும் ஒரே சட்டத்தில் எவ்வாறு சீரமைப்பது என்பதை ஒரு நிபுணர் குழு கண்காணிக்கும் ” என கூறியிருந்தார். இந்நிலையில் தான், மாநிலத்தில் இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து சட்டங்களை ரத்து செய்ய, அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, விரைவில் உத்தராகண்ட் மாநிலத்தை போன்று அசாமில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் காண