Annamalai: “142 கோடி மக்களும் மோடியின் குடும்பமே”… நந்தனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நந்தனம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகம் போற்றக்கூடிய உத்தம தலைவர் நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள், சென்னைக்கு நம்மை எல்லாம் சந்திக்க வந்திருக்கிறார். இதற்குமுன், சென்னைக்கு பலமுறை பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தாலும் கூட, இந்த முறை தன்னுடைய குடும்பத்தை சந்திக்க வந்திருக்கிறார்.
ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை சந்தித்து, உங்களிடம் பேச வந்திருக்கும் பிரதமர் மோடியை உங்களின் சார்பாக வரவேற்கிறேன்.     மத்திய அமைச்சர் எல்.முருகன் பிரதமர் மோடியை நம்முடைய குடும்பம் என்று சொன்னார். பீகாரில் லாலு பிரசாத் யாதவ், மோடிக்கு குடும்பம் இல்லை, தனி நபர் என்று சொன்னார். அப்போ நாம் அனைவரும் யார்..? 142 கோடி மக்களாகிய நாம் இருக்கும்போது, அவருக்கு எப்படி குடும்பம் இல்லாமல் போகும். 
அதனால் நீங்கள் அனைவரும் உரக்க சொல்லுவோம், மோடியின் குடும்பம் நாம் என்று. இவர்களின் கண்களுக்கு கோபால புரம் குடும்பம்தான் தெரியும். அந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் திமுக குடும்பம். பீகாரில் தொடர்ச்சியாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறது லாலு பிரசாத் யாதவ் குடும்பம். 17 வயதிலேயே தன்னுடைய வீட்டைவிட்டு இந்தியா முழுவதும் சுற்றி திரிந்து, இன்று கிட்டத்தட்ட ஒரு யோகியாக தன்னுடைய வாழ்க்கை முழுவதும் மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தவர்தான் பாரத பிரதமர் மோடி. 
அதுமட்டுமின்றி, இந்த தேர்தலில் நாம் மோடியுடைய குடும்பம் என்று நிற்கும்போது கோபாலபுரத்தின் குடும்பத்தை போன்று, இந்தியா முழுவதும் 4 தலைமுறைகளாக மாறி மாறி ஆட்சி செய்யும் எல்லா குடும்பத்தையும் அரசியலில் இருந்து அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தல் ஒரு அற்புதமான வாய்ப்பை நமக்கு கொடுத்திருக்கிறது. நிச்சயமாக நாம் இதை பயன்படுத்தி, மோடியுடைய குடும்பமாக இருக்க கூடிய நம்முடைய தமிழ் சொந்தங்கள் எல்லாம் இந்த முறை பட்டிதொட்டி எல்லாம் 400 எம்பிகளை கடந்து எம்பிக்களை தர வேண்டும். தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களையும் தர வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இன்னைக்கு மேடையில் பிரதமர் மோடிக்கு, காஞ்சிபுரத்தில் நெய்யப்பட்ட பட்டினால் கூடிய சால்வையை போர்த்தியுள்ளோம். அந்த சால்வையில் மோடி ஐயாவுக்காக, சிறுத்தை புலி அச்சிட்டு கொடுக்கப்பட்டது. மோடி அவர்கள் மக்களுக்காக மட்டும் போராடவில்லை, வாய பேச முடியாத ஜீவன்களுக்காகவும் போராடுகிறார். 2014ம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தபோது, 7,910 சிறுத்தை புலிகள் இந்தியாவில் இருந்தது. இன்றைக்கு 75% உயர்ந்து 13,874 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கவே இந்த சால்வை. 
இன்று தமிழ்நாட்டில் நடக்கும் திமுக ஆட்சி போய் ஆட்சி செய்வதுபோல் இருக்கிறது என்பதே சாட்சி. கொள்ளை காரனுக்கு, மணல் கடத்தல் காரனுக்கு, சாராயம் விற்பனை செய்யபவனுக்கு, கஞ்சா விற்பவனுக்கு இந்த தமிழ்நாட்டில் முதல் மரியாதை. சாதாரண மக்களுக்கு மரியாதை இல்லை. இந்த 60 நாட்கள் இந்திய அரசியலில் மிக முக்கியமான 60 நாட்கள். அடுத்த 25 ஆண்டுக்கான திட்டத்தை  வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. அதற்கான அடித்தளத்தை 2024ல் போடவேண்டும் ” என பேசினார். 
 

மேலும் காண

Source link