சாதிய அரசியல் செய்யும் திமுகவிற்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப் பிடிக்கவில்லை என்றால், சமூக நீதி கணக்கெடுப்பு நடத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு தனது மனைவி சௌமியா அன்புமணியுடன் சாமி தரிசனம் செய்தார்.
அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ், ”வடலூரில் உள்ள வள்ளலார் சத்ய ஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பதற்கு தமிழக அரசு அடிக்கல் நாட்டியுள்ளது. சர்வதேச மையம் அமைப்பதற்கு பாமக ஆதரவு தெரிவிக்கிறது, ஆனால் சத்ய ஞான சபை அமைந்துள்ள பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க கூடாது.
மக்கள் ஒன்று கூடி ஜோதி தரிசனம் காண இந்த பெருவெளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வள்ளலார் சர்வேச மையம் தொடங்குங்கள் ஆனால் வடலூர் பெருவெளியில் எந்த கட்டுமானங்களும் இல்லாமல் வள்ளலாரின் கனவுப்படி இந்த நிலம் அப்படியே இருக்க வேண்டும் என்பது அவரின் விருப்பமும் கூட. வள்ளலார் சர்வதேச மையத்தை அருகில் உள்ள வேறு ஏதாவது இடத்தில் அமையுங்கள்.வள்ளலார் வாழ்ந்த இந்த மண்ணை தமிழக அரசு கைவிட வேண்டும். வள்ளலார் சர்வதேச மையத்தை சென்னையில் அமைத்தால் உலகம் முழுவதும் அவருடைய புகழ் பரவும்” என்று தெரிவித்தார்.
பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசுக்கும் அக்கட்சியின் கொள்கைக்கும், வள்ளலாருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றார். 100% விழுக்காடு பெருவெளியில் எந்த ஒரு கட்டுமானமும் இருக்கக் கூடாது என மக்களின் எண்ணம் உள்ள நிலையில், அரசின் திட்டத்திற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்றார். பஞ்சு மிட்டாய் தடை செய்யும் அரசு அதைவிட கொடுமையான சாராயத்தை எப்பொழுது தடை செய்யும் எனவும் கேள்வி எழுப்பினார். சமூக நீதி என்று பேசினால் மட்டும் போதாது, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும், எனவும் அந்த பெயர்தான் பிரச்சனை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று நடத்துங்கள் என வலியுறுத்தினார். மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை என்றால் அரசு அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார்.
Published at : 27 Feb 2024 07:29 PM (IST)
மேலும் காண