தலையை எடுப்பேன் என்றவரை கைது செய்யாத‍துதான் திராவிட மாடலா? – அன்புமணி கேள்வி

தலையை எடுப்பேன் என்று மேடையில் பேசிவரை 3 நாட்களாகியும் கைது செய்யாத‍துதான் திராவிட மாடலா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்

ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், கடலூர் மஞ்சக்குப்பம் பிரச்சினையை குறிப்பிட்டு பேசினார். குடிபோதையில் இருந்த ஒரு கும்பல் பாமகவை சேர்ந்த இளைஞரை கொடூரமாக தாக்கியதாகவும், அவருக்கு ஆறுதல் கூற சென்ற பாமக மாவட்டச் செயலாளர் வன்னியர் சங்கத் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

10 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால், அதற்கு முன்பாக வன்முறை கும்பல் கூட்டம் போட்டு, வன்னியர் சங்கத் தலைவர் பு.த.அருள்மொழியின் தலையை எடுப்பேன் என்று மேடையிலேயே கூறியவர்கள் மீது 3 நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமையில் தான் காவல்துறை இயங்குகிறது என்ற அன்புமணி ராமதாஸ், ஒருவரது தலையை எடுப்பேன் என்று மேடையில் ஒருவர் பேசி 3 நாட்கள் ஆகியும் இதுவரை கைது செய்யாத‍து தான் திராவிட மாடல் ஆட்சியா என்று கேள்வி எழுப்பினார்.

மிகப்பெரிய சமூகமான வன்னியர் சங்கத்தின் தலைவரின் தலையை எடுப்பேன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டாமா என்றும், இதுதான் உங்களுடைய லட்சணமா என்றும் வினவினார். இதுதான் முதலமைச்சரின் நிர்வாகத் திறமையா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது வன்னியர் சங்க பிரச்சினையோ, சாதி பிரச்சினையோ கிடையாது என்ற அவர், இரு சமுதாயங்களுக்கு இடையே சண்டை மூட்டி குளிர்காய்கிற திராவிட மாடல் ஆட்சி என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஸ்கால்டாந்து காவல்துறைக்கு நிகரானது தமிழ்நாடு காவல்துறை என்று கூறிய நிலையில், ஒருவரது தலையை எடுப்போம் என்று கூறி 3 நாட்களாகியும் கைது செய்யாமல் அவ்வளவு கோழைத்தனமாக மாறிவிட்டதா என்று வேதனை தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினை பற்றி பதிவு போட்டால் உடனே கைது செய்யும் காவல்துறை, எவ்வளவு பெரிய மிகப்பெரிய பிரச்சினை ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த பிரச்சினையை அதிகப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.