மின் கட்டண உயர்வைக் கண்டித்து முதல் ஆளாய் போராடிய அன்புமணி ராமதாஸ்…

தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக நிர்வாகிகள், பொதுமக்கள், வணிகர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மின் கட்டண உயர்வைக் கண்டித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். உயர்த்தப்பட்ட மின் கட்டண அறிவிப்பை திரும்ப‍ப் பெற வேண்டும் என்றும், மின்சாரத்துறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, அதன்மூலம் மின்வாரிய கடன்களை அடைக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கடுமையாக பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதாலேயே, மின்சார வாரியம் கடனில் த‍த்தளிப்பதாக குற்றம் சாட்டினார். மின்சார வாரியத்தை சீர்திருத்தினாலே பிரச்சினைகளை சரி செய்யலாம் என்றும், ஆனால், அதற்கு பதில் சாமானிய மக்கள் மீது சுமையை திணிப்பதாக வேதனை தெரிவித்தார்.

தமிழக அரசு, உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்ப‍ப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய அன்புமணி ராமதாஸ், சென்னையில் நடத்தப்பட்டது அடையாள ஆர்ப்பாட்டம் என்றும், தமிழக அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால், தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரித்தார்.