டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அமெரிக்க அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ளது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பதிலில், “ முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை அமெரிக்க அரசு கவனித்து வருகிறது. இந்த வழக்கில் நியாயமான வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதையும், சிறையில் இருக்கும் முதலமைச்சருக்கு தக்க நேரத்தில் சட்ட உதவி கிடைத்திடவும் உதவி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக டெல்லி முதலமைச்சர் கைது நடவடிக்கைக்கு ஜெர்மனி அரசு கருத்து தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என தெரிவித்து இருந்தது. ஆனால் இதற்கு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதாக கூறு ஜெர்மனி அரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை அமைப்பு மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவருக்கு ஒன்பது சம்மன்கள் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.
கைதானாலும் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்றும், தொடர்ந்து முதலமைச்சராக செயல்படுவார் என்றும், சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவார் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர், பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் 6 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒரு பக்கம் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தேர்தல் நேரத்தில் இது போன்ற நடவடிக்கை மத்திய அரசின் சூழ்ச்சி என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காண