காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
காசாவில் ருத்ரதாண்டவம் ஆடும் இஸ்ரேல்:
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை கிட்டத்தட்ட 30,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், காசாவில் போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தூதரகம் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சிப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை விரைந்துள்ளது. ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பே, தூதரகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வீரர்கள், தீயை அணைத்துள்ளனர்.
பாலஸ்தீனத்திற்காக உயிரைவிட்ட அமெரிக்க விமானப்படை வீரர்:
உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனத்தை விடுவியுங்கள் என முழக்கம் எழுப்பியபடி, தனக்கு தானே அந்த நபர் தீயை வைத்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க விமானப்படை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “நேற்றைய சம்பவத்தில் தொடர்புடைய பெயர் குறிப்பிடப்படாத நபர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்த பிறகு, 24 மணிநேரத்திற்குப் பிறகு கூடுதல் விவரங்களை வழங்குவோம்” என்றார்.
இதுதொடர்பாக இஸ்ரேல் தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் பேசுகையில், “இந்த சம்பவத்தில் எந்த ஊழியர்களும் காயமடையவில்லை. மேலும் அந்த நபர் யார் என்று தெரியவில்லை” என்றார்.
The last walk of Aaron Bushnell, a 25-year-old member of the US Air Force who self-immolated outside the Israeli embassy in Washington in protest against US involvement in Israel’s genocide in Gaza.https://t.co/FwAAH0GJ8B
— Lowkey (@Lowkey0nline) February 26, 2024
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர், பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண