Ambedkar Jayanti 2024 From caste dynamics to partition, four books by B R Ambedkar you must read | Ambedkar Jayanti 2024: அனல் பறக்கும் அரசியல் எழுத்துகள்


Ambedkar Jayanti 2024: சாதி இயக்கம் முதல் பிரிவினை வரை அவசியம், படிக்க வேண்டிய,  டாக்டர் அம்பேத்கரின் நான்கு புத்தகங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
அம்பேத்கர் ஜெயந்தி:
சமூக சீர்திருத்தவாதி, அரசியலமைப்பின் முதன்மை சிற்பி என பல்வேறு அடையாளங்களை கொண்டவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பீம் ஜெயந்தி அல்லது அம்பேத்கர் ஜெயந்தி என கொண்டாடப்படுகிறது.  அந்தவகையில் நாளை அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவர் எழுதிய, அனைத்து தரப்பினரும் அவசியம் படிக்க வேண்டிய சில புத்தகங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. சாதி இயக்கவியல் தொடங்கி ஆட்சியின் தன்மை வரை என அவரது எழுத்துகள் புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆன்லைனிலும் கிடைக்கிறது. 
சாதி ஒழிப்பு:
 1936 இல் எழுதப்பட்ட அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு’ நூல் இந்தியாவில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதிய அமைப்பைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது. இது இந்து சமூகத்தின் படிநிலை கட்டமைப்பை விமர்சிக்கிறது. சமூக நீதி மற்றும் அனைவருக்கும் சமத்துவத்தை அடைய அதன் அழிவிற்காக வாதிடுகிறது. இந்த புத்தகம் இன்றைய சூழலுக்கும் பொருத்தமானது மற்றும் இந்தியாவில் இருந்து வெளிவரும் மிக சக்திவாய்ந்த அரசியல் எழுத்துக்கள் அடங்கிய புத்தகமாக ”சாதி ஒழிப்பு” கருதப்படுகிறது.
கூட்டாட்சி Vs சுதந்திரம்:
அம்பேத்கரின் இந்த 164 பக்கக் கட்டுரை, இந்தியாவின் ஆளுமை கட்டமைப்பில் மையப்படுத்தல் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் பற்றி விரிவாக விளக்குகிறது. 1945ல் வெளியான இந்த கட்டுரை  பிராந்திய சுயாட்சியை உறுதிப்படுத்தும் அதே வேளையில், தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட நமது சமூகத்தில் கூட்டாட்சி முறையின் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு அம்பேத்கரின் இந்த நுண்ணறிவு மிகவும் அவசியமானதாக உள்ளது .
சூத்திரர்கள் யார்?
1946 இல் வெளியான இந்த அறிவார்ந்த படைப்பு, இந்தியாவில் சூத்திர சாதியினரின் தோற்றம் மற்றும் சமூக நிலையை ஆராய்கிறது. வேதங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘மகாபாரதம்’ போன்ற இதிகாசங்களை மேற்கோள் காட்டி, சமூகத்தின் ‘தாழ்வு நிலை’ பற்றிய பாரம்பரிய இந்து சமூக நம்பிக்கைகளுக்கு சவால் விடுத்துள்ளார்.  மேலும், பழமையான சித்தாந்தங்களையும் உடைத்தெறிந்துள்ளார்.
பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை :
 544 பக்கங்கள்கொண்ட இந்த புத்தகம் 1947ல் இந்தியப் பிரிவினைக்கு வழிவகுத்த காரணிகளின் வரலாற்றுப் பகுப்பாய்வாகும். 1940 இல் வெளியிடப்பட்ட இந்த புத்தகம்,  முஸ்லிம் லீக்கின் தனி முஸ்லிம் நாடு கோரிக்கை மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தில் அதன் தாக்கங்களைப் பற்றி விவாதிக்கிறது.  அந்தக் காலத்தின் சிக்கலான சமூக-அரசியல் இயக்கவியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேலும் பிரிவினைக்கு ஆதரவான மற்றும் அதற்கு எதிரான வாதங்களையும் அம்பேத்கர் தெளிவாக பகுப்பாய்வு செய்துள்ளார்.
 
 
 
 

மேலும் காண

Source link