இன்னும் 2 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் உள்ளது. தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு அமைந்த பிறகு, வரும் ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதே சமயத்தில் கொள்கை அளவில் பெரிய மாற்றங்களை பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?

பொதுவாக பட்ஜெட் என்றால் எவ்வளவு செலவாகும், எதற்கு எவ்வளவு செலவு செய்யப்படும் என்பது குறித்த அனைத்து தகவல்களும் அடங்கியிருக்கும். எதற்கு எவ்வளவு வரி விதிக்கப்படும், அரசின் கொள்கைகள் என்பதும் அதில் சொல்லப்படும்.

ஆனால், தேர்தல் ஆண்டில் ஆட்சி மாறுவதற்கான வாய்ப்பிருப்பதால், எந்த ஒரு அரசாலும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதற்கு பதில், தேர்தல் நடந்து முடியும் வரை, இடைக்காலத்துக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதன்மூலம், நிதியை பயன்படுத்த அரசுக்கு அனுமதி வழங்கப்படும். இது, Vote on Account என சொல்லப்படுகிறது.

விவசாய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

தீவிர காலநிலை மாற்றங்களாலும், பருவநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தாலும், பணவீக்கத்தாலும் விவசாயத்துறை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. அதுமட்டும் இன்றி, தேர்தல் ஆண்டு என்பதால் விவசாயத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கு என 1.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2013-14 நிதியாண்டை ஒப்பிடுகையில் பல மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2013-14 ஆண்டில், 27,662.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள், வரி நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயத்தில், விவசாய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் தொடரும் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விவசாயிகள் கடன்:

அடுத்த நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கு 22-25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் அரசின் நிறுவனங்கள் மூலம் கடன் கிடைப்பதை உறுதிசெய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அரசின் விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், டிசம்பர் 2023 வரை, விவசாயக் கடன் இலக்கான 20 லட்சம் கோடி ரூபாயில் 82 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

மானியம்:

அரசு வழங்கும் மானியங்களில் பெரும்பகுதி உணவு மற்றும் உரத்துக்கும் வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளிகளை பாதிக்காத வகையில் யாருக்கு சென்றடைய வேண்டுமோ அவர்களை குறிவைத்து மானியம் வழங்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது, உணவு மானியத் திட்டம் ‘வீட்டு நுகர்வோர் செலவின கணக்கெடுப்பு 2011-12’ல் இருந்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.