கர்நாடகாவில் நடிகர் யஷ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேனர் கட்டிய 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் யஷ். இவர் 2007 ஆம் ஆண்டு ஜம்பதா ஹுடுகி என்ற படம் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் அறியும் வகையில் அமைந்த படம் தான் “கேஜிஎஃப்”. இந்த படம் கன்னட நடிகராக இருந்த யஷை பேன் இந்தியா ஸ்டாராக மாற்றியது.

தொடர்ந்து கேஜிஎஃப் 2 படத்தில் நடித்த அவர், தற்போது அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருகிறார். யஷ் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் யஷ் பிறந்தநாளில் மிகப்பெரிய சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதாவது கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ரசிகர்கள் பேனர் வைக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்னழுத்த கம்பி பேனர் மீது உரசியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக கடந்தாண்டு ஜூலை மாதம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்ற ஆந்திர ரசிகர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், யஷ் பிறந்தநாளிலும் அதே சம்பவம் நடைபெற்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actor Yash: “கேஜிஎஃப்” நடிகர் யஷ் பிறந்தநாளில் சோகம் .. பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு