actor vijay tamizhaga vetri kazhagam meeting held at panaiyur oath taken by party cadres


இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக ஆலோசனை கூட்டத்தில் தங்கள் கட்சி நிர்வாகிகளை தோழர்கள் என அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Vijay) . ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  அதே நேரத்தில், விஜய் அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார். விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது. அதே சமயம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 ஆம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி அமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு. சமஉரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உறுதி மொழியினை அனைவரும் ஏற்றனர்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அவரது கட்சி பெயரில் பிழை இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டது. கட்சியின் பெயரில் இருந்த பிழையை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியதை ஏற்று, விஜய் அதில் திருத்தம் செய்துள்ளார். அதாவது தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரில், வெற்றி கழகத்திற்கு இடையே ஒற்றெழுத்தான “க்” சேர்த்து ”தமிழக வெற்றிக் கழகம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

மேலும் காண

Source link