பூடான் சென்ற பிரதமர் மோடி:

இந்தியாவின் அண்டை நாடான பூடானுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணாக பிரதமர் மோடி இன்று சென்றடைந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பூடான் விமான நிலையத்தில் மலர்கள் மற்றும் வண்ணக் கோலங்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையில், பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்காய் ஆரத் தழுவி வரவேற்றார். பின்னர், அந்நாட்டு ராணுவ மரியாதையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திம்புவில் உள்ள அவரது ஹோட்டலில் மக்கள் அவருக்கு நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். குஜராத்தின் பாரம்பரிய உடையான காக்ரா-சோலி, பைஜாமாவை உடுத்தி, கர்பா நடனம் ஆடி அசத்தினர்.

பூடானின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி:

இந்த நிலையில், பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ’ விருதை அளித்தனர். இந்த விருதை பெற்ற முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவர் என்ற பெருமையை பெற்றார் பிரதமர் மோடி.

இந்தியா-பூட்டான் உறவுகளின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி செய்த சிறப்பு பங்களிப்பையும், பூட்டான் நாட்டுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் அவர் செய்த சிறப்பான சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தரவரிசை மற்றும் முன்னுரிமையின் படி, ‘ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ’ விருது வாழ்நாள் சாதனைக்கான அலங்காரமாக நிறுவப்பட்டது.

பூடானில் உள்ள மரியாதை அமைப்பின் உச்சமாக உள்ளது. இந்த விருதை அந்நாட்டின் நான்கு ஆளுமைகள் மட்டுமே பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் தான், பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருதை பெற்றிருக்கிறார்.

”140 கோடி இந்தியர்களின் பெருமை”

இந்த விருதை பெற்ற பிரதமர் மோடி, "இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள், பூடானின் உயரிய விருது எனக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருதும் சிறப்பானது தான். ஆனால் வேறு நாட்டிலிருந்து அந்நாட்டின் விருதைப் பெறும்போது, இரு நாடுகளும் சரியான பாதையில் செல்கின்றன என்பதை உணர்த்துகிறது.

இந்த விருது எனது தனிப்பட்ட சாதனையின் பெருமை அல்ல. 140 கோடி இந்தியர்களின் பெருமை. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அனைத்து இந்தியர்கள் சார்பாகவும் இந்த விருதை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ரஷியா தனது உயரிய சிவிலியன் விருதான ‘தி ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது. 2020ஆம் ஆண்டு அமெரிக்க ஆயுதப்படையின் ‘லெஜியன் ஆப் மெரிக் பை தி யு.எஸ். கவர்மென்ட்’ என்ற விருதை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.