தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமான ஒரு தொலைக்காட்சி என்றால், அது விஜய் தொலைக்காட்சி தான்.
ஸ்டார் விஜய்யாக விஜய் தொலைக்காட்சி மாறிய காலம் தொடங்கி ரீல் – ரியல் சின்னத்திரை ஜோடிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, கலக்கப்போவது யாரு?, குக்கு வித் கோமாளி என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு ஹிட் ரியாலிட்டி ஷோவுடன் விஜய் தொலைக்காட்சி பயணித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்களைக் கவர்ந்த தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய “அது இது எது?” நிகழ்ச்சி.
வித்தியாசமான கான்செப்ட், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு சவால் விட்டு சிரிக்க வைப்பது, சிவகார்த்திகேயனின் அட்டகாசமான டைமிங் என இந்நிகழ்ச்சி இளைஞர்கள் முதல் பெரியவர்களை ஈர்த்து தொலைக்காட்சி முன் அமர வைத்து ஹிட் அடித்தது. குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு இந்நிகழ்ச்சி பிள்ளையார் சுழி போட்ட நிலையில், அவர் படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து பிஸியாக, மற்றொருபுறம் விஜய் தொலைக்காட்சியில் வளர்ந்து வந்த தொகுப்பாளரான மாகாப ஆனந்த் இந்நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கினார்.
தொடர்ந்து 2 சீசன்களாக வெற்றிநடைபோட்ட இந்த நிகழ்ச்சி இடையே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது “அது இது எது?” நிகழ்ச்சியின் புதிய சீசன் குறித்த ப்ரொமோ வீடியோ ஒன்றைப் பகிர்ந்து விஜய் டிவி தரப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாபா ஆனந்த் இந்த ப்ரோமோவில் வித்தியாசமான கெட் அப்பில் தோன்றும் நிலையில், சிரிப்பை வரவழைக்கும் இந்த ப்ரோமோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடர்பான பிரச்னை சமீபத்தில் வெடித்து இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக முன்னதாக வெங்கடேஷ் பட் அறிவித்தார். இதனால் ஏற்கெனவே விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்த நிலையில், தற்போது மற்றொரு பிரபல நிகழ்ச்சியான அது இது எது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.
மேலும் காண