நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு மாநிலத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பத்திரப்பதிவுத் துறை செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார் ஓய்வு பெற்றதையடுத்து ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தலைவர்தான் மாநிலத்தின் தலைமை தேர்தல் ஆணையர் . மாநிலத் தேர்தல் ஆணைய அமைப்பு திருத்தச் செயல் சட்டத்தின் கீழ் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்கள் இவரது தலைமையில்தான் நடைபெறும். அதாவது, தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி தேர்தல்கள் நடைத்தப்படும்.
மாநில தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றதையடுத்து மாநில தேர்தல் ஆணையராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமியைத் தேர்வு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பியிருந்தது.
ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி மாலை பதவியேற்றுக் கொண்டார்.