DMK Congress Alliance I.N.D.I.A Bloc Seat Sharing 10 MP Seats Lok Sabha Elections 2024

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றது. இதில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திக்கின்றது. இதில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் I.N.D.I.A தேர்தலைச் சந்திக்கின்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு கூட்டணிப் பேச்சுவார்தைகளும் தொகுதிப் பங்கீடும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள I.N.D.I.A கூட்டணியில் ஏற்கனவே விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கொமதேக, மதிமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு மட்டும் கையெழுத்தாகாமல் இருந்தது. 
இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 9ஆம் தேதி திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் இணைந்து மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். 
தொகுதிப் பங்கீடுக்குப்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசுகையில், “ மத்தியில் மக்கள் விரோத அரசு நடைபெற்று வருகின்றது. அதனை துடைத்தெறியும் கருத்தியலை திமுக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் என மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இந்த தொகுதிப் பங்கீட்டின் மூலம் திமுக மற்றும் காங்கிரஸை பிரிக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது” என தெரிவித்துள்ளார். 

#WATCH | Tamil Nadu | Congress will contest elections on 9 seats in Tamil Nadu and one seat in Puducherry. On the remaining seats, we will support the candidates of DMK and alliance parties. We will win all 40 seats of Tamil Nadu, says Congress MP KC Venugopal pic.twitter.com/fcksz92VVK
— ANI (@ANI) March 9, 2024

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு விபரங்கள்
திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டினை திமுக நிறைவு செய்துள்ளது. 
இதில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவையுடன் இணைந்து மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் என மொத்தம் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. 
இந்திய மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. 
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட இராமநாதபுரம் தொகுதியே மீண்டும் ஐயூஎம்எல்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
கொங்குநாடு மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

Source link