TVK Party Leader Vijay Begins Member Registration Tamilaga Vetri Kazhagam Members Registration


தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை அறிமுகம் செய்து வைத்த விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் உறுப்பினராய் சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கி வைத்தார். இந்த அறிவிப்பில் கட்சியில் இணைய விரும்புபவர்கள் கட்சியின் உறுதிமொழியை படித்துப் பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் மட்டும் கட்சியில் இணையலாம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி, “ நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

#தமிழகவெற்றிக்கழகம் #TVKMembershipDrive #TVKVijay pic.twitter.com/e4DqN18sn2
— TVK Vijay (@tvkvijayhq) March 8, 2024

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” என இடம் பெற்றுள்ளது. 
தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி உள்ள நிலையில், அவர் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்தார். கட்சி பெயரில் எழுதுப் பிழை இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததும் கட்சியின் பெயரினை, தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி அறிவித்தார். 
 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார்.  இந்நிலையில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். 

மேலும் காண

Source link