Shouldn’t anyone criticize the DMK government? Is this the Dravidian model?- Seeman about teacher suspension! | திமுக அரசை யாருமே விமர்சிக்கக் கூடாதா? இதுதான் திராவிட மாடலா?


கல்வி செயற்பாட்டாளர் உமா மகேசுவரியை திமுக அரசுப் பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்துள்ளார்.  எனினும் இதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
”பள்ளிக் கல்வித்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், புதிய கல்விக் கொள்கையின் குறைபாடுகள் குறித்தும் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்த கல்விச் செயல்பாட்டாளரும், அரசுப் பள்ளி ஆசிரியருமான மதிப்பிற்குரிய உமா மகேசுவரியை திமுக அரசுப் பணியிடை நீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை விமர்சித்தார் என்பதற்காக கொடுங்குற்றம் புரிந்த கைதியைப்போல, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அலைபேசியைப் பறித்து வைத்துக்கொண்டு ஆசிரியர் சு.உமா மகேசுவரியை மிரட்டியுள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
தேசிய கல்விக் கொள்கையை முன்னிலைப்படுத்தி, அதனைத் தழுவியே தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படுவதைக் கண்டித்த பேராசிரியர் ஜவகர் நேசன் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் அரசின் மாநில உயர்நிலைக் கல்வி குழுவிலிருந்து தானாக விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அதிகார அத்துமீறல்
அதனைத் தொடர்ந்து, கல்விச் சிக்கல் தொடர்பாகவும், பள்ளிக் கல்வித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் தமது அறிவார்ந்த சீர்திருத்தக் கருத்துகளைத் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக முன்வைத்து வந்த ஆசிரியர் உமா மகேசுவரியை, ‘அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு அரசையே விமர்சிப்பாயா? தேசிய கல்விக் கொள்கையைத் தவறு என எப்படிக் கூறலாம்?’ என்ற தொனியில் மிரட்டி, சட்டத்திற்குப் புறம்பாக திமுக அரசு தற்போது பணியிடை நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.
திமுக அரசை யாருமே விமர்சிக்கக் கூடாதா?
திமுக அரசை யாருமே விமர்சிக்கக் கூடாதா? அதன் தவறான செயல்பாடுகளை எதிர்த்து யாரும் கேள்வியே எழுப்பக்கூடாதா? அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுவோரைப் பதவியிலிருந்து அகற்றித் தண்டிப்பதுதான் சமூக நீதி போற்றும் திராவிட மடலா? இதற்குப் பெயர்தான் கருத்துச் சுதந்திரமா? பாஜக அரசு வர்ணாசிரம அடிப்படையில் கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த திமுக அரசு துடிப்பதேன்? அதனை எதிர்க்கும் கல்வியாளர்களை கடுமையாகத் தண்டிப்பது ஏன்?
பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களையும், அதன் மனுவாத சட்டங்களையும் கடுமையாக எதிர்ப்பதாக திமுக அரசு கூறுவதெல்லாம் வெற்று ஏமாற்று அரசியல் நாடகம் என்பதற்கு ஆசிரியர் உமா மகேசுவரி மீதான பணியிடை நீக்க நடவடிக்கை மற்றுமொரு சான்றாகும்.
ஆகவே, சட்டத்திற்குப் புறம்பாக ஆசிரியர் உமா மகேசுவரி மீது எடுக்கப்பட்டுள்ள பணியிடை நீக்க நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்து, அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: அரசை விமர்சிப்பது குற்றமா? அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம்

மேலும் காண

Source link