WPL 2024: மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி அணிக்கு எதிரனா போட்டியில், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமான பந்தை ஷப்னிம் இஸ்மாயில் வீசியுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்:
ஐபிஎல் பாணியில் மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் இரண்டாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். அதோடு, மகளிர் கிரிக்கெட் உலகில் பல புதிய சாதனைகளும் படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில், மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத வகையில், அதிவேகமான பந்து வீச்சை பதிவு செய்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமான பந்துவீச்சு:
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஷப்னிம் இஸ்மாயில் களமிறங்கினார். அப்போது, வேகம் மற்றும் திறமையின் வெளிப்பாடாக, வலது கை வேகப்பந்து வீச்சாளரான இஸ்மாயில் மகளிர் கிரிக்கெட்டில் முதல்முறையாக மணிக்கு 130 கிலோ மீட்டர் என்ற வேகத்தை எட்டினார். துல்லியமாக குறிப்பிட்டால், மணிக்கு 132.1 கிலோ மீட்டர் வேகத்தில் (82.08mph) பந்து வீசினார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லானிங்கின் ஸ்டம்பில் அடித்த ஷப்னிம் இஸ்மாயில் வீசிய பந்து, பெண்கள் கிரிக்கெட்டில் முதல் முறையாக 130 கிமீ வேகத்தைத் தாண்டியது.
தொடர்ந்து மிரட்டும் ஷப்னிம் இஸ்மாயில்:
மகளிர் கிரிகெட் விளையாட்டில் அதிவேகப் பந்துவீச்சாளராகப் புகழ் பெற்ற இஸ்மாயில், இதற்கு முன் 2016 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மணிக்கு 128 கிலோமீட்டர் (79.54mph) வேகத்திலும், 2022 ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது மணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தையும் பதிவு செய்திருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் கடந்த ஆண்டு ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து, இஸ்மாயிலின் அனல் பறக்கும் ஆட்டம் உலக அளவில் கிரிக்கெட் ஆர்வலர்களை வசீகரித்து வருகிறது.
Shafali Vemra goes 6⃣,6⃣But Shabnim Ismail has the final laugh 😎Recap the eventful over 🎥🔽Live 💻📱https://t.co/NlmvrPpyIL#TATAWPL | #DCvMI pic.twitter.com/EixWU1HIEJ
— Women’s Premier League (WPL) (@wplt20) March 5, 2024
சர்வதேச கிரிக்கெட் பயணம்:
16 வருடங்கள் நீடித்த ஒரு புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் பயணத்தில், இஸ்மாயில் தென்னாப்பிரிக்கா அணிக்காக 127 ஒருநாள் போட்டிகள், 113 T20 போட்டிகள் மற்றும் ஒரு தனியான டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 191 விக்கெட்டுகள் மற்றும் டி20 போட்டிகளில் 123 விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 317 சர்வதேச விக்கெட்டுகளை குவித்துள்ள இஸ்மாயிலின் பந்துவீச்சு திறமை விளையாட்டில் அழியாத முத்திரையை பதித்துள்ளது.