Silambarasan TR Trisha Samantha Ruth Prabhu Starrer Gautham Vasudev Menon’s Vinnaithaandi Varuvaayaa Completed 14 years | 14 Years of VTV: காதலில் திளைத்த கார்த்திக்


இயக்குநர் கௌதம் மேனனின் காதல் படங்களில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள விண்ணைத்தாண்டி வருவாயா (Vinnaithaandi Varuvaayaa) படம் இன்றோடு 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 
தனித்துவமான காதல் படம் 
காதல் படங்களை இயக்கும் தமிழ் சினிமா இயக்குநர்களில் வித்தியாசமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவருடைய படங்களை பார்த்தால் காதலே பிடிக்காதவர்கள் ரசிக்கும் அளவுக்கு ரசனையான காட்சிகளை அடுக்கியிருப்பார். காதலை ஒரு புதிய கோணத்தில் காட்சிப்படுத்திய படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியான இப்படம் இன்றோடு 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 
இப்படத்தில் சிலம்பரசன், திரிஷா, விடிவி கணேஷ், நாக சைதன்யா, சமந்தா, கிட்டி, பாபு ஆண்டனி, உமா பத்மநாபன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்த இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் விநியோகம் செய்தது. 
காட்சிகளின் வழியே கவிதை
கீழ் வீட்டில் இருக்கும் இந்து குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு, மேல் வீட்டில் இருக்கும் மலையாள கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த ஜெஸ்ஸி மீது காதல் ஏற்படுகிறது. முதலில் கார்த்திக்கின் வயது பிரச்சினையாக வருகிறது. சினிமாவில் இயக்குநராகும் ஆசையில் கார்த்திக் இருக்கிறார். ஆனால் சினிமாவையே வெறுக்கும் குடும்பம் ஜெஸ்ஸியினுடையது. அதையும் தாண்டி போகும் கதையில் ஜெஸ்ஸிக்கும் கார்த்திக் மீது காதல் ஏற்படுகிறது. இதையறிந்த குடும்பம் ஜெஸ்ஸிக்கு கேரளாவில் திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். திருமணத்துக்கு கார்த்திக்கும் செல்கிறார். இதன்பிறகு என்னானது என்பதே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் கதையாகும். 
மேலோட்டமாக பார்த்தால் தமிழ் சினிமா பார்த்து பார்த்து பழகிய கதை தான். ஆனால் அதில் வயது, சினிமாவை விரும்பும் ஹீரோ, வெறுக்கும் ஹீரோயின் குடும்பம், காதல், பிரிவு என அனைத்தையும் கலந்து கட்டி அழகான கவிதை படைத்திருப்பார் கௌதம் மேனன். 
கார்த்திக் – ஜெஸ்ஸி 
வழக்கமான அலட்டல் இல்லாமல் சிலம்பரசன் இப்படத்தில் கார்த்திக் கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார். குறிப்பாக சினிமாவுக்கு இவ்வளவு டெடிகேஷனாக அவர் நடித்தது பாராட்டைப் பெற்றது. இதேபோல் ஜெஸ்ஸியாக வரும் த்ரிஷாவுக்கு இது ஒரு அடையாளமாகவே மாறியது. மற்றபடி விடிவி கணேஷூக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் சமந்தா இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதில் அவரது ரீல் லைஃப் ஜோடியாக முன்னாள் கணவர் நாகசைதன்யா நடித்திருப்பார். 
விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், தாமரையின் பாடல் வரிகளும் தான். ஒவ்வொன்றும் கிளாசிக்கல் ஹிட் என சொல்லும் அளவுக்கு சிறப்பாக இருந்தது. இந்த படம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் கௌதம் மேனனின் வசனமும், படத்தில் உச்சரிக்கப்படும் ஸ்டைலும் அனைத்து இளம் வயதினருக்கும் அத்துப்படி. அந்த அளவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா ஏற்படுத்திய தாக்கம் அதிகம். விரைவில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 உருவாகலாம் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். 
எத்தனை பாகங்கள் வந்தாலும் மாஸ்டர் பீஸ் படமான 2010ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயாவை யாராலும் மறக்க முடியாது…!

மேலும் காண

Source link