விழுப்புரம்: திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளான இன்று பிறந்த குழந்தைகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தங்க மோதிரம் அணிவித்தார்.

தங்க மோதிரம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மையத்தில் ஜெயலலிதா பிறந்த நாளான இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்ததோடு, அங்குள்ள உள் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள், மருத்துவர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவல் தெய்வம், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் வழிவந்த அரசியல் ஞானி, தமிழக மக்களின் பாசத்திற்குரிய அன்பு அம்மாவின் 76-ஆவது பிறந்த நாள் இன்று. ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி, எந்தவிதத்திலும் சமரசம் இல்லாமல், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், சமநிலையோடு, சமதர்மத்தோடு, சமூக நீதியோடு அரசாண்ட சிங்க நிகர்த் தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா. தன்னுடைய வாழ்வு இந்த மக்களுக்கான தவ வாழ்வு. எப்போதும் மக்களிடத்திலே அதை நிரூபிக்கின்ற விதமாக "உங்களால் நான், உங்களுக்காகவே நான்" என்று தொடர்ந்து மக்கள் முன் சூளுரை ஏற்று, அதன்படி மக்கள் பணியாற்றிய ஒப்பற்ற தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா.அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்போம்.

எனதருமைக் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்றி, புரட்சித் தலைவி அம்மா பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றியை எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெற்று, அந்த வெற்றியை புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கு வெற்றி மாலைகளாக, அவர்கள் நீடு துயில் கொள்ளும் நினைவிடங்களில் சமர்ப்பிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். நம்மையெல்லாம் அன்புடன் அரவணைத்து, அரசியல் பாடம் சொல்லி, வழிநடத்திய நம் அன்பு அம்மாவின் பிறந்த நாளில், கழகம் காக்கவும், கழகத்தை தேர்தல்களில்மகத்தான வெற்றி பெறச் செய்திடவும், நாம் அனைவரும் அயராது உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்! என்று உளமார உறுதி ஏற்போம். அதேபோல், 2026-ஆம் ஆண்டுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆண்டு என்பதையும் உறுதிப்படுத்துவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.