சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி. ராஜு. அண்மையில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.வி.ராஜு, கூவத்தூரில் எம்எல்ஏக்களை விலை பேசி ஆட்சிக்கு வந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறியதோடு திரிஷாவின் பெயரை குறிப்பிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதனிடையே நடிகர் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு ஏ.வி.ராஜூ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின், “நடிகை திரிஷா ஒரு பெண். தமிழ்நாட்டில் பெண்களை தெய்வமாக மதிக்கும் சூழ்நிலையில் அனைவரும் உள்ளோம். பெண்கள் நம் நாட்டின் கண்கள். நடிகை திரிஷா மட்டுமல்ல எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு அவப்பெயர் வரும்போது கண்டிப்பாக நான் குரல் கொடுப்பேன். நடிகை திரிஷாவுடன் நான் திருப்பாச்சி படத்தில் நடித்துள்ளேன். திரிஷா மிகவும் நல்லவர். சிறிய நடிகர்களை மதிக்க கூடியவர். திரைப்பட நடிகைகள் மட்டுமல்ல பெண்கள் குறித்து அவதூறு பேசுவது கண்டிக்கத்தக்கது” என்றார். மேலும், “நடிகை திரிஷாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய நபர் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை திரிஷாவை தவறாக சித்தரித்து பேசியதை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்” என்று கூறினார்.
மேலும் காண