Atrocities On Dalits Tribal Man Stripped Hung Upside Down And Thrashed In Madhya Pradesh |


Atrocities On Dalits: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞரை நிர்வாணமாக்கி தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
பழங்குடியின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்:
இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. 
அதாவது, மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் டீக்கடையில் இருந்த பழங்குடியின இளைஞரிடன், ஒரு கும்பல் பணத்தை கேட்டுள்ளனர்.  பணம் தர மறுத்த இளைஞரை, அந்த கும்பல் ஈவு இரக்கமின்றி தாக்கி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோவும் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில், பழங்குடியின இளைஞரின் ஆடைகளை அவிழ்த்து, தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமாக அடித்துள்ளனர். பெல்ட், கட்டை மற்றும் செருப்பால் கடுமையாக தாக்கியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக இளைஞரை அந்த கும்பல் தாக்கி இருப்பதாக தெரிகிறது.
வழக்குப்பதிவு:
இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், “ஒரு கும்பல் என்னுடைய ஆடைகளை அவிழ்த்து தலைகீழாக தொங்கவிட்டு அடித்தது.  கட்டை, பெல்ட் மற்றும் செருப்பால் அடித்தனர். நான் ஏன் தாக்கப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் நான் நடத்தி வரும் டீக்கடைக்கு பணம் கேட்டார்கள்.
அவர்கள் துப்பாக்கி வைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் கொலை செய்துள்ளார் என்று கேள்விப்பட்டேன். அதனால் நான் யாரிடமும்  இதை பற்றி சொல்லவில்லை. இது சம்பந்தமான வீடியோ வைரலானபோது, நான் சகோதரரிடம் தெரிவித்தேன்”  என்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
மற்றொரு சம்பவம்:
இதனை தொடர்ந்து, குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் பட்டியலின மாப்பிள்ளை ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். குதிரையில் அமர்ந்து திருமண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தி தாக்கி இருக்கிறது ஒரு கும்பல். குதிரையில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை விகாஸை தாக்கி கீழே தள்ளி அந்த கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. 
அந்த கும்பல், “குதிரையில் நீயெல்லாம் ஏறிச் செல்லக்கூடாது என்றும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குதிரையில் ஏறிச் செல்ல அனுமதி” என்று கூறியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளனர்.  சைலேஷ் தாகூர், ஜெயேஷ் தாகூர், சமீர் தாக்கூர் மற்றும் அஷ்வின் தாக்கூர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 
 

மேலும் காண

Source link