தமிழ் சினிமாவின் கேப்டனாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு திரை உலகத்தினருக்குத் மிக பெரிய இழப்பாக அமைந்தது.
மிகப்பெரிய இழப்பு :
நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று நடிகர் நடிகைகளின் பிரச்சினைக்காக நேரம் காலம் பாராமல் உதவிக்கு வந்தவர். எந்த ஒரு வேற்றுமையும் பாகுபாடும் இன்றி அனைவருடனும் ஒரே மாதிரியாக பழக்க கூடிய விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவராகவவும் மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். தன்னுடைய உடல் நிலை காரணமாக பல ஆண்டுகளாக சினிமாவிலும் அரசியலிலும் ஈடுபடாமல் வீட்டிலேயே இருந்து வந்தாலும் அவரின் மறைவுக்கு திரைகடல் போல மக்கள் கூட்டம் தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும் இருந்து சென்னை வந்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில் பல காரணங்களால் அன்று வர முடியாத சில பிரபலங்கள் பின்னர் ஒருவர் பின் ஒருவராக நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.
அந்த வகையில் நடிகை ரம்பா தனது கணவருடன், கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். உடன் நடன இயக்குநர் கலா மாஸ்டரும் தன்னுடைய குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார். கோயம்பேட்டில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்றுவிட்டு பின்னர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரின் மனைவி பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்டு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அஞ்சலி செலுத்திய கலா மாஸ்டர் :
வெளியூர் சென்றிருந்த காரணத்தால் கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாத கலா மாஸ்டர், அவர் சென்னை திரும்பியதும் நேரடியாக விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி விட்டு, பிரேமலதாவிற்கு ஆறுதல் தெரிவித்து விட்டு வந்தார். தற்போது மீண்டும் நடிகை ரம்பா உடன் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்துள்ளார் கலா மாஸ்டர்.
விஜயகாந்த் பற்றி ரம்பா :
1997ம் ஆண்டு வெளியான ‘தர்ம சக்கரம்’ படத்தில் நடிகர் விஜயகாந்த் ஜோடியாக நடிகை ரம்பா நடித்திருந்தார். அப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரம்பா நேர்காணல் ஒன்றில் பகிர்கையில் நடிகர் விஜயகாந்த் குறித்து பேசி இருந்தார். பொள்ளாச்சியில் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதனால் நெரிசலை சமாளித்து படப்பிடிப்பு எடுக்க வேண்டும் என்பதற்காக காலை 7 மணிக்கே ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளார்கள்.
அப்போது விஜயகாந்த், ரம்பாவிடம் நாளை ஷூட்டிங்கிற்கு காலையில் சீக்கிரமாக 4.30 மணிக்கே வரமுடியுமா என கேட்டுள்ளார். 7 மணிக்கு தானே சூட்டிங் எதற்காக அவ்வளவு சீக்கிரம் வர வேண்டும் என மெதுவாக 7 மணிக்கு ரம்பா ஷூட்டிங் ஸ்பாட் வந்து இறங்கியுள்ளார். ஆனால் விஜயகாந்த் காலையிலேயே அங்கு வந்து உட்கார்ந்து இருந்தாராம். அதனால் டைம் விஷயத்தில் மட்டும் அவரை பார்த்தால் எனக்கு கொஞ்சம் பயம் என அந்த பழைய நேர்காணலில் நடிகை ரம்பா தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண