TNPSC Group 4 Exam: தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜுன் மாதம் 6ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சரிபார்க்க 04.03.2024 அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது போன்ற மிக முக்கிய விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
TNPSC குரூப் 4 பதவிகள் என்ன?
TNPSC குரூப் 4 தேர்வு மூலம், கிராம நிர்வாக அலுவலர் (VAO), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், பில் கலெக்டர், வன காப்பாளர், வன கண்காணிப்பாளர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
குரூப் 4 தேர்வுக்கான வயது வரம்பு?
குரூப் 4 தேர்வுக்கு 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21 முதல் 32 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
VAO தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி என்ன?
TNPSC VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குரூப் – 4 தேர்வுக்கான கல்வித்தகுதி?
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
tnpscexams.in என்ற TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்றது, TNPSC ஒரு முறை பதிவு உள்நுழைவு விவரங்களை பதிவிடு லாக்-இன் செய்யவும். தொடர்ந்து, TNPSC குரூப் 4 விண்ணப்பப் படிவம் 2024 ஐ பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும். தொடர்ந்து, விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். இறுதியாக TNPSC குரூப் 4 விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பக்கட்டணம் எவ்வளவு?
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150 செலுத்த வேண்டும். ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. இது போக, குரூப் 4 தேர்வுக்கு ரூ.100 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
10 வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல், ஆதார் அட்டை போன்ற அரசால் வழங்கப்பட்ட ஏதாவது ஆவணம், ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் (அகலம்: 3.5 செ.மீ, உயரம்: 4.5 செ.மீ, 50 KB-க்கு மேல் இருக்க கூடாது), ஊனமுற்றோர் சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்), ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம் (அகலம்: 6 செ.மீ, உயரம்: 3 செ.மீ, 50 KB க்கு மேல் இருக்க கூடாது) மற்றும் உடல் தகுதி சான்றிதழ் (தேவைப்பட்டால்) ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
TNPSC குரூப் 4 தேர்வை தமிழில் எழுதலாமா?
TNPSC குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இருக்கும். உங்களுக்கு விருப்பமான மொழியில் நீங்கள் எழுதுவதற்கான ஆப்ஷனை விண்ணப்பிக்கும்போது தேர்வு செய்துகொள்ளலாம்.
குரூப் – 4 தேர்வுமுறை என்ன?
தேர்வுக்கான வினாத்தாளனது 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக உருவாக்கப்படும். அதில் பகுதி ஏ-யில் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) தமிழ் பாடத்தில் கேட்கப்படும். பகுதி பி-யில் பொது படிப்புகள் (75 கேள்விகள்), ஆப்டிடியூட் தேர்வு (25 கேள்விகள்) நடத்தப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதாவது 200 கேள்விகள் மூலம் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். அனைத்து சமூகத்தினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 என உள்ளது. எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.
குரூப் 4 தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்?
TNPSC குரூப் – 4 தேர்வுக்கு தயாராக 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை படிப்பது போதுமானது. முந்தைய ஆண்டு தேர்வுகளின் வினாத்தாள்களை பார்த்து, பதிலளித்து பழகுவது நல்ல அனுபவத்தை கொடுக்கும். அதோடு, சில பதிப்பகங்கள் வெளியிடும் ஆல்-இன்-ஒன் முழுமையான படிப்புப் புத்தகம் & தீர்க்கப்பட்ட வினாத்தாள் அடங்கிய புத்தகங்களை படிக்கலாம்.
ஊதியம் எவ்வளவு வழங்கப்படும்?
அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 4 பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கான ஊதியம், நிலை 8-ன் கீழ் வழங்கப்படுகிறது. அதாவது அடிப்படை ஊதியம் ரூ. ரூ. 19,500 தொடங்கி அதிகபட்சமாக ஸ்டெனோ டைபிஸ்ட் (கிரேட் 3) பதவிக்கு ரூ. 75,900 வரை மாத சம்பளம் வழங்கப்படும். பதவியின் அடிப்படையில் சம்பள வரம்பு மாறுபடும்.