இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இச்சூழலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி விளையாடமாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்தது. இதனை நேற்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டும் உறுதிபடுத்தினார். மேலும், விராட் கோலிக்கு பதிலாக மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது தான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விராட் கோலிக்கு பதிலாக முதல் 2 போட்டிகளில் மத்திரயபிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரஜத் படிதார் சேர்க்கப்பட்டார். கடந்த வாரம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 151 ரன்களை குவித்த இவர், சமீபகாலமாக நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதனால் தான் இவரை பிசிசிஐ தேர்ந்தெடுத்திருக்கிறது.
இளம் வீரருக்கு வாய்ப்பு அளித்தது ஏன்?
அதேநேரம், மூத்த வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்காமல் இளம் வீரருக்கு வாய்ப்பு அளித்தது ஏன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் மூத்த வீரர் ஒருவரை மீண்டும் தேர்வு செய்யலாம் என்று தான் நினைத்திருந்தோம். ஆனால், நம்மிடம் இருக்கும் இளம் வீரர்களுக்கு எப்போது வாய்ப்பு வழங்குவது? அனுபவம் வாய்ந்த ஒரு வீரரை வெளியேற்றுவதோ அல்லது அவர்களது அனுபவத்தை கருத்தில் கொள்ளமல் புறக்கணிப்பது என்பதோ மிகவும் கடினம்.
ஆனால், சில நேரங்களில் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை வழங்குவது முக்கியமான ஒன்று. இளம் வீரர்களை நேரடியாக வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் கிடைக்கும் வாய்ப்பை அவர்களுக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்று ரோகித் சர்மா கூறினார்.
மேலும் படிக்க: Rohit Sharma: “வெறும் 156 ரன்கள்தான்” கங்குலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ரோகித் சர்மா! விவரம் உள்ளே!
மேலும் படிக்க: Virat Kohli: ஐ.சி.சி.யின் கனவு டெஸ்ட் அணியில் ரோகித், விராட் கோலிக்கு இடம் இல்லை – ரசிகர்கள் ஷாக்