Former America President Donald Trump Criticizes Vivek Ramaswamy Ahead Of Iowa Caucus 2024 | Vivek Ramaswamy

உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க  அதிபர் தேர்தல், நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.  தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், வரும் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 
அமெரிக்க அதிபர் தேர்தல்:
பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி உள்ளிட்டோர் அதிபருக்கான வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். 
உள்கட்சி தேர்தல் நடத்தி, சொந்த கட்சியினர் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவரே, கட்சியின் சார்பில் அமெரிக்காவில் தேர்தலில் நிற்க முடியும். இதற்காக, ஒவ்வொரு மாகாணத்திலும் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அயோவா மாகாணத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
உள்கட்சி தேர்தலின் ஒரு பகுதியாக வேட்பாளர்களுக்கு இடையே விவாதம் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், தனது வியூகத்தை மாற்றியுள்ளார் முன்னாள் அதிபர் டிரம்ப். குடியரசு கட்சியை சேர்ந்த சக போட்டியாளரான விவேக் ராமசாமியை டிரம்ப் விமர்சிக்க தொடங்கியிருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
உத்தியை மாற்றிய முன்னாள் அதிபர் டிரம்ப்:
சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூட, விவேக் ராமசாமியுடன் நட்புணர்வை பேணி வந்தார் டிரம்ப். இப்படியிருக்க, அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக ஆக்க வேண்டும் என்ற தன்னுடைய பிரச்சாரத்துக்கு விவேக் ராமசாமி அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
விவேக் ராமசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ட்ரூத் சோசியல் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், “என்னுடைய சிறந்த ஆதரவாளர் என சொல்லி தனது பிரச்சாரத்தை தொடங்கினார் விவேக். இந்த தலைமுறையின் சிறந்த அதிபர் என்றெல்லாம் சொன்னார்.
துரதிர்ஷ்டவசமாக, இப்போது அவர் செய்வதெல்லாம் ஏமாற்று பிரச்சார தந்திரங்களின் வடிவமாக உள்ளது. மிகவும் தந்திரமாக செயல்படுகிறார். ஆனால், விவேக்கிற்கு வாக்கு அளிப்பது எதிர் அணிக்கு வாக்களிப்பது போன்றதாகும். இதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். “TRUMP”க்கு வாக்களியுங்கள். 
 

உங்கள் வாக்கை வீணாக்காதீர்கள்! விவேக்கால் அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக ஆக்க முடியாது. அரசியல் எதிரிக்கு எதிராக பைடன் வைக்கும் குற்றச்சாட்டுகளை அனுமதிக்க முடியாது. அவை ஏற்கனவே வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

Source link