பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தினை நெருங்கிவிட்டது. ஒவ்வொரு சீசனும் அதற்கு முந்தைய சீசன்களை விட வித்தியாசமாக இருக்கும் என்பதை பிக்பாஸ் ரசிகர்களே கூறி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் சீசனுக்கு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் கடந்து மக்கள் மத்தியில் இருக்கும் அபிப்ராயங்களில் ஒன்று ”இது முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட்டுப்பா” எனும் விமர்சனம். ஆனால் அனைத்தையும் கடந்து பிக்பாஸ் சீசன் தொடங்கும்போது பிக்பாஸ் மீதான எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் கூடிக்கொண்டுதான் போகின்றது.
ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு பாடத்தினை கற்பித்துக்கொண்டுதான் உள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக யாராவது தேர்வு செய்யத்தான் போகின்றார்கள். ஆனால் ரசிகர்களுக்கு இந்த சீசன் ரசிகர்களுக்கு கற்பிக்கும் பாடம் என்ன? இந்த சீசன் விஜய் டீவிக்கு டி.ஆர்.பியை அள்ளிக்கொடுத்திருந்தாலும், இந்த சீசன் பிக்பாஸ் வீட்டினைக் கடந்து பொதுவெளியிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது.
குறிப்பாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் மற்ற போட்டியாளர்கள் குறித்து கண்ணியக்குறைவாக பேசியதை பார்த்தோம். பிக்பாஸ் என்பது போட்டி நிறைந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அது உணர்த்துவது ஒன்றுதான் அது அன்பு பாராட்டுவது. ஆனால் இந்த சீசனில் அன்பு காட்டுவது என்பது சார்புத்தன்மை கொண்டதாக இருந்தது என்றே கூறவேண்டும்.
ஆரி – பாலா
இதற்கு முன்னர் நடந்த சீசன்களில் போட்டி இறுதி கட்டத்தினை எட்டிவிட்டால் போட்டியாளர்கள் தங்களுக்குள் இருந்த பகையை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, அன்பு செலுத்த, ஒருவரையொருவர் பாராட்டி வீடு முழுவதும் அன்பைப் பரப்புவார்கள். நான்கவது சீசனில் ஜென்ம விரோதிகள் போல் இருந்த ஆரியும் பாலாவுமே இறுதி கட்டத்தில் உடன் பிறந்த சகோதரர்களைப் போல் பழக ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் இந்த சீசனில் அப்படி இல்லை. முழுக்க முழுக்க நேர் எதிராக உள்ளது. இன்னும் மற்றவர்களை குறைசொல்லிக் கொண்டு இருக்கின்றனர். மூன்றாவது சீசனில் மிகவும் வில்லிபோல் பார்க்கப்பட்ட வனிதா விஜயகுமார் இறுதி நாட்களில் அனைவரையும் அரவணைத்து அன்பு பாராட்டினார். இப்படி இந்த சீசனில் வில்லி போல் பார்க்கப்பட்ட நபர் என யாருமே இல்லை. ஆனால் இவர்களிடத்தில் அன்பு பாராட்டுவதைப் பார்க்க முடியவில்லை. சில இடங்களில் முகம் சுழிக்கவைக்கின்றனர்.
விஷ்ணு, மணி மற்றும் தினேஷ் என இவர்கள் மூவரும் ஸ்மால் பாஸ் வீடே கதி என இருப்பதுடன் மாயா மற்றும் பூர்ணிமா குறித்து எதாவது கமெண்டுகள் பாஸ் செய்து கொண்டே இருந்தனர். பூர்ணிமா வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மாயாவையும் அர்ச்சனாவையும் சராமாரியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். வீட்டிற்குள் இருப்பவர்கள் இப்படி இருக்கும்போது வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்து மீண்டும் பிரிவினையை வளர்த்துவிடும் விதமாகவே பேசி வருகின்றனர்.
மொத்தமும் வேஸ்ட்
இதனைப் பார்க்கும்ப்போது இவர்களுக்கு கமல்ஹாசன் போன்ற கலையுலகின் பல்கலைக் கழகத்தின் மூலம் பட்டை தீட்டப்பட்டதெல்லாம் சுத்த வேஸ்ட். இதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் வீட்டிற்குள் சோர்வாக இருந்தபோதெல்லாம் பிக்பாஸ் கன்ஃபர்ஷன் ரூமுக்கு அழைத்து அவர்கள் போட்டியில் சிறப்பாக கவனம் செலுத்த ஊக்கமூட்டினார். ஆனால் அது அனைத்தும் சுத்த வேஸ்ட் என்பது போல் போட்டியாளர்கள் நடந்துகொள்கின்றனர். அர்ச்சனா தனக்கு கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம், அனைத்து போட்டியாளர்களையும் அட்டாக் செய்து வருகிறார்.
நீளும் மனக்கசப்பு
வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வரும்போது விஷ்ணு, மணி மற்றும் தினேஷ் தங்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற மனக் கசப்புகளை மறந்துவிட்டு அன்பாக பேசியிருந்தால் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்திருக்கும். ஆனால் அவர்களோ தங்களது அணியில் இருந்தவர்களை அனுப்புங்கள் பிக்பாஸ் என அவர்களாகவே தங்களை எல்லைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.
இவர்கள் மூவருக்குமே கூட இந்த சீசன் முடிந்த பின்னர் கடைசி நாட்களின் எபிசோட்களை பார்க்கும்போது ”அன்பாக இருந்திருக்கலாமே” என யோசிக்க வைக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக விஷ்ணு டிக்கெட் டூ ஃபினாலேவை வென்ற பின்னர் அனைவரிடத்திலும் கூடுமானவரை நல்ல நினைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாததற்கு காரணம் அவருக்குத்தான் தெரியும் என்றாலும், சக போட்டியாளர்கள் யாரும் அவரின் ஜென்ம விரோதிகள் இல்லைதானே. அன்பு பாராட்டுங்க மக்கா..