ஸ்டாலின் ஆட்சி கவிழ்ந்துவிடும்… திமுகவே இருக்காது… எச்சரித்த அன்புமணி ராமதாஸ்…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தால் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வடக்குச்சிபாளையம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறும் போது, இங்கு தேர்தல் அதிகாரியே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்று வேதனை தெரிவித்தார். திமுகவினர் பணம், பொருட்களை கொடுத்து வருவதாக குற்றம் சாட்டிய அன்புமணி ராமதாஸ், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் திமுகவினர் ஷெட் போட்டுள்ளதாக கூறினார்.

500 ஷெட்கள் போடப்பட்டுள்ளதாகவும், இது யார் கணக்கில் வரும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுக கொடி கட்டிய 2000 வாகனங்கள் சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், இதையெல்லாம் கண்காணித்து தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம், நேர்மையான முறையில் தேர்தல் நடத்த முடியாத திறமையற்ற தேர்தல் ஆணையமாக இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தை பூட்டிவிடலாம் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.

திமுகவின் பண பலம், அதிகார பலத்தையும் மீறி இந்த இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெறுவது உறுதி என்று அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார். ஆட்சி அதிகாரம் இல்லாமல், தமிழகத்தில் உட்பட 6 இட ஒதுக்கீடுகளை பாமக பெற்றுத் தந்த‍தாக பெருமிதம் தெரிவித்த அவர், சமூக நீதிக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்த‍மும் இல்லை என்றார்.

தமிழகத்தில் தற்போது உள்ள 69% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிடுவார்களோ என்ற அச்சம் தனக்கு இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பஞ்சாயத்து தலைவருக்கே அதிகாரம் இருக்கும் போது, முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லையா? என்று கேள்வி எழுப்பிய அவர், பீகார், கர்நாடக மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்துள்ளதாகவும், அவற்றை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளதாகவும் கூறினார்.

ஆனால், தனக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் பொய் சொல்லி வருவதாகவும், அதற்கு காரணம் 2 சமுதாயங்கள் முன்னேறிவிட்டால் தனக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பதால் தயங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அன்புமணி ராமதாஸ், உச்சநீதிமன்றம் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் சூழல் வந்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும், அன்றைக்கே திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும், திமுக என்ற கட்சியே இருக்காது என்றும் எச்சரித்தார்.