தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பாக மாநில அளவில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர் ஜூலை 6 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ஹாக்கி தொடருக்கான இலச்சினை(லோகோ), சின்னம், வீரர்களுக்கான டி.சர்ட் ஆகியவற்றை அறிவிக்கப்பட்டது.
பின்னர், இந்திய ஹாக்கி சங்கத்தின் நிர்வாகிகள், ஹாக்கி தொடரின் சின்னத்தை வெளியிட்டனர். சிம்பா என்கிற பெயரில் சிங்கக்குட்டியின் கையில் ஹாக்கி மட்டை பிடித்திருப்பது போன்று சின்னம் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் சேகர் மனோகரன், கடந்த 2 ஆண்டுகளாக ஆசியன் சாம்பியன்ஸிப், தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாகவே இந்த ஹாக்கி தொடர் நடத்த உள்ளதாகவும், 300க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், 17 வயதுக்குட்பட்ட 5000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
லீக் போட்டிகள் முடிந்தவுடன், மண்டல வாரியாக 6 மண்டல அளவில் போட்டியிட்டு, அதன்பின்னர் கூட்டு அணிகளை தேர்ந்தெடுத்து மாநில அளவில் சாம்பியன்ஸிப் போட்டிகள் நடத்த உள்தாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் குறைவான அளவிலேயே செல்லும் சூழல் இருப்பதாக வேதனை தெரிவித்த அவர், இதுபோன்ற பள்ளி அளவிலான போட்டிகள் இந்திய அணியில் ஜூனியர் அளவில் வீரர்களை தயார் செய்வதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
இதில், 40% அரசுப் பள்ளிகள் பங்கேற்க உள்ளதாகவும், போட்டிகள் முடிந்தவுடன், 35 வீரர்களை தேர்ந்தெடுத்து சிறப்பு பயிற்சி அளிக்க உள்தாகவும் சேகர் மனோகரன் தெரிவித்தார்.