Google Layoff: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
கூகுள் ஊழியீர்கள் பணிநீக்கம்:
குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. 2024ஆம் ஆண்டில் பணிநீக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கும் என்று நினைத்தால், ஆரம்பமான சில நாட்களிலேயே நிறுவனங்கள் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தொடங்கிவிட்டன. மேலும், வருங்காலத்திலும் இந்த பணிநீக்கங்கள் தொடரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, ஏஐ தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை கூட பறிக்கலாம் என்று கூட ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
என்ன காரணம்?
தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் வாய்ஸ் மூலம் செய்லபடும் கூகுள் அசிஸ்டென்ட் சேவை பிரிவில் பணியாற்றி வந்தவர்களும், ஆக்மென்டெட் ரியாலிட்டி பிரிவின் வன்பொருள் அணியின் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து செலவின குறைப்பில் ஈடுபடுவதாக அறிவித்து இந்த புதிய பணிநீக்கத்தை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதேபோல, கூகுள் நிறுவனத்தின் சென்டரல் இன்ஜினியரிங் பிரிவில் இருக்கும் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கூகுள் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் கூறுகையில், “2023ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி முழுவதும் எங்களின் பல அணிகள் மிகவும் திறமையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு மாற்றங்களை கொண்டு வந்தனர். நாங்கள் சில கட்டமைப்பை மாற்ற வேண்டி உள்ளது. சில நிறுவனங்கள் ஆய்வுகளை செய்து வருவதால் கூடுதலாக பணிநீக்கங்கள் அடுத்த சில மாதங்களில் உலகளவில் நடக்கும்” என்றார்.
தொடரும் பணிநீக்கங்கள்:
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஜெராக்ஸ் நிறுவனம் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்யும் இந்த நிறுவனத்தில், 3 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது ஜெராக்ஸ். இந்த பணிநீக்கத்தைத் தொடர்ந்து, ஜெராக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 12 சதவீதம் சரிவை கண்டது.
மேலும், கூகுள் நிறுவனம் 30 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் கூட, பேடிஎம் நிறுவனம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஊழியர்களின் செலவினத்தில் 10 முதல் 15 சதவீதம் சேமிக்க முடியம் என்பதால் பேடிஎம் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.