80s super hero Mohan has given a come back to cinema will he succeed once more?


ஒரு சில நடிகர்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் தன்னுடைய பாந்தமான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களில் நேரடியாக குடியேறி விடுவார்கள். அப்படி ஒருவர் தான் 80ஸ் காலகட்டத்தில் இளவட்டங்களின் ஹார்ட் த்ரோப்பாக திகழ்ந்த நடிகர் மோகன்.  அவருடன் ரசிகர்களுக்கு இருக்கும் பந்தமானது அவரின் படம் மற்றும் பாடல்கள் மூலம் இன்றும் பின்தொடர்ந்து வருகிறது.  

 
ஆரம்ப காலகட்டம் :
படங்களில் நடிக்க வேண்டும், பெரிய நாயகனாக வேண்டும் என்ற கனவெல்லாம் இல்லாத ஒரு சாதாரண ஆண் மகனாக இருந்த மோகனுக்கு நாடகத்தில் நடிக்க நண்பர்கள் மூலம் வாய்ப்பு வந்தது. வற்புறுத்தலின் பேரில் அன்று துவங்கியது மோகனின் திரைப்பயணம். அந்த நாடகம் மூலம் பாலுமகேந்திராவின் பார்வை அவர் மேல் பட்டது. சினிமா வாசனையே இல்லாத புதிய முகம், இயல்பான நடிப்பால் ஈர்க்கப்பட்ட பாலுமகேந்திரா, 1977ம் ஆண்டு தான் இயக்கிய முதல் கன்னட படமான ‘கோகிலா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். முதல் படமே மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. 

சினிமாவில் முதல் வாய்ப்பு :
அதன் மூலம் தமிழில் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தினார். பாலு மகேந்திராவின் ‘மூடுபனி’, இயக்குநர் துரையின் ‘கிளிஞ்சல்கள்’, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ‘பயணங்கள் முடிவதில்லை’, மணிவண்ணனின் அறிமுக படமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என தொடர்ச்சியாக வெற்றிவிழா படங்களாக தூள் கிளப்பினார் நடிகர் மோகன். 
மோகன் – இளையராஜா காம்போ :
இயக்குநர்களின் சிந்தனைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது, தயாரிப்பாளர்களின் விருப்பமான நடிகராக இருப்பது என்பது எல்லாம் அவ்வளவு எளிதில் சம்பாதித்து விட முடியாது. ஆனால் அதை சாத்தியமாக்கி அனைவருடன் தோழமையுடன் பழக கூடிய விருப்பமான நடிகராக திகழ்ந்தார் மோகன்.  இளையராஜாவின் பொற்காலமான அந்த காலத்தில் மோகனின் அடுத்தடுத்த படங்களுக்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைப்பாளர். அவர்கள் இருவரின் காம்போவில் வெளியான ஏராளமான பாடல்கள் இன்று வரை ‘நினைத்தாலே இனிக்கும்’ வகையறாதான். மோகனுக்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்துமே பிரமாதமாக அமைந்தது ஒரு சூப்பர் ஸ்பெஷல். 

வெற்றி விழா நாயகன் :
உதய கீதம், நெஞ்சமெல்லாம் நீயே, பிள்ளை நிலா, நான் பாடும் பாடல், நூறாவது நாள், 24 மணி நேரம், இளமைக்காலங்கள், தூங்காத கண்ணென்று ஒன்று, குங்குமச்சிமிழ், மெல்லத் திறந்தது கதவு, ரெட்டைவால் குருவி, மெளன ராகம், மெளனராகம்,இதயக்கோயில் உள்ளிட்ட படங்களில் அவரின் வெற்றிப்பாதையில் அழகு சேர்த்தன. 1984ம் ஆண்டு மட்டுமே அவரின் நடிப்பில் 15க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. அதில் பெரும்பாலான படங்கள் வெற்றிவிழா கொண்டாடியாதல் ‘வெற்றிவிழா நாயகன்’ என கொண்டாடப்பட்டார் மோகன்.   
80ஸ் சாக்லேட் பாய்:
கமலுக்கு பிறகு ஏராளமான பெண் ரசிகர்களை கொண்ட 80ஸ் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் மோகன் தான். அம்பிகா, ராதா, ராதிகா,பூர்ணிமா ஜெயராம், நளினி, அமலா, ரூபினி, ரேவதி என அந்த காலகட்ட முன்னணி நடிகைகள் அனைவரும் மோகனுடன் டூயட் பாடியவர்கள் தான்.  80ஸ் காலகட்டத்தில் கமல், ரஜினி படங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றாலும் மோகன் படங்களும் அவர்களுக்கு இணையாக வெற்றி பெற்று வசூலை குவித்துள்ளது. 

சுரேந்தரின் டப்பிங் :
மோகன் படம் என்றாலே அவருடைய தனித்துவமான அந்த குரல் தான் நம் நியாபகத்திற்கு வந்து போகும். ‘கோகிலா’ படம் முதல் ‘கிருஷ்ணன் வந்தான்’ படம் வரை மோகனுக்கு டப்பிங் பேசியது சுரேந்தர் தான். ஒரு சமயத்தில் மோகனின் வெற்றிக்கு சுரேந்தர் குரல் தான் காரணம் என சில விமர்சனங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. அந்த விமர்சனத்தை பிடிக்காத மோகன் அதற்கு பிறகு அனைத்து படங்களிலும் அவரே டப்பிங் பேச துவங்கினார். இது தான் அவரின் படங்கள் சரிவை சந்திக்க காரணமாக இருந்தது என கூறப்படுகிறது. 
கம்பேக் எப்படி? 
ஒரு வெற்றி நாயகனாக திகழ்ந்த நடிகர் மோகன் இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். தற்போது GOAT படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தில் மோகன் தான் வில்லனாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த கம் பேக் மூலம் மீண்டும் களம் காணுவாரா நடிகர் மோகன்? அவரின் ரீ என்ட்ரி சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள். 

மேலும் காண

Source link