கர்நாடக மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளை வைத்து பள்ளி நிர்வாகம் கழிவறையை சுத்தப்படுத்துவதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே, இது போன்ற தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கோலாரில் உள்ள குடியிருப்பு பள்ளி ஒன்றிலும் பெங்களுருவில் உள்ள பள்ளி ஒன்றிலும் ஷிவமோகாவில் உள்ள பள்ளி ஒன்றிலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது.

பள்ளிக் குழந்தைகளை வைத்து கழிவறையை சுத்தம் செய்யும் நிர்வாகம்:

இச்சூழலில், கடந்த மாதம், கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தப்படுத்த தடை விதிக்கப்பட்டது. மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தப்படுத்தினால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்திருந்தது.

இந்த உத்தரவு பிறப்பித்து ஒரு மாதமே ஆன நிலையில், அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களை வைத்து கழிவறை சுத்தம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரில் உள்ள அரசுப் பள்ளியில் கழிவறையை இரண்டு மாணவர்கள் சேர்ந்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசு முதுநிலை தொடக்கப்பள்ளிக்கு கர்நாடக அரசின் குழு சென்று, மாணவர்களின் வாக்குமூலத்தை பெற்றுள்ளது.

பிரச்னைக்கு தீர்வு என்ன?

பள்ளிக் குழந்தைகளை வைத்து கழிவறையை சுத்தப்படுத்துவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக எச்சரித்திருந்தார். "பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவது மிகவும் கேவலமான செயல். இது போன்ற செயல்கள் சகிக்க முடியாதவை" என சித்தராமையா கூறியிருந்தார்.

அதுமட்டும் இன்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் நிலவும் நிலை குறித்து ஆராய கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். பள்ளிகளில் கழிவறையை சுத்தப்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

கடந்த மாதம், கோலாரில் உள்ள குடியிருப்பு பள்ளி ஒன்றிலும் பெங்களுருவில் உள்ள பள்ளி ஒன்றிலும் ஷிவமோகாவில் உள்ள பள்ளி ஒன்றிலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்தன. இதை தொடர்ந்து, கர்நாடக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவுறுத்தலில், "கல்வி, விளையாட்டு, தனித்திறமையை வெளிப்படுத்த உதவும் நடவடிக்கைகளில் மட்டுமே மாணவர்கள் ஈடுபட வேண்டும். கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் இருந்து மாணவர்களை விலக்கி வைப்பது ஆசிரியர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுக்களின் கடமையாகும்" என குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிக்க: CM Stalin In Spain : "ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரும் ஒற்றுமை" : முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது என்ன?