1200 வருடம் பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு.!


8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம், மற்றும் அருப்புக்கோட்டை ஸ்ரீதர் , தாமரைக் கண்ணன் இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற் கொண்ட பொழுது ,நெய்வனையை அடுத்த பில்ராம்பட்டு கிராமத்தில் வயல்வெளியில் சிற்பம் ஒன்று இருப்பதாக வந்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர்.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வதிடம் பேசுகையில், சேஷ நதிக்கரையின் வடக்கே அமைந்துள்ள பில்ராம்பட்டு ஊரின் வயல்வெளியில் மத்தியில் மரங்கள் சூழ அதன் அடியில் ஒரு பலகை கல்லினால் ஆன சிற்பம் ஒன்று காணப்பட்டது. சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் படைப்பு சிற்பமாகப் பெண் உருவம் காணப்பெறுகிறது. அச்சிற்பத்தைத் தூய்மை செய்து ஆய்வு செய்ததில் அச்சிற்பம் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை என்று கண்டறியப்பட்டது.
 

கொற்றவையின் கைகளில்  அடுக்கடுக்காக வளையல்கள் 
வித்தியாசமான உள்ளூர் கலைபாணியில் அமைந்த மகுடம் தலையை அலங்கரிக்க , நீள் வட்டமான முகத்தில் தடித்த உதடுகளும் இரு செவிகளில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் சரப்பளி போன்ற பட்டையான அணிகலனையும், தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான மார்பு கச்சை அணிந்து காட்சியளிக்கிறார். எட்டு கரங்களில் தனது மேல் வலது கரம் சக்கரத்தை ஏந்திய நிலையில் ஏனைய வலது கரங்கள் முறையே வாள் , மணியுடன் மற்றொரு கரம் அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும் , மேல் இடது கரத்தில் சங்கும் ஏனைய கைகள் முறையே வில், கேடயம் ஏந்திய நிலையில் கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. அனைத்து கைகளிலும் அடுக்கடுக்காக வளையல்கள் காட்டப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

 
1200 வருடம் பழமையான கொற்றவை சிற்பம் 
கொற்றவையின் தலையருகே வலது புறம் சூலமும், சிம்மமும் காட்டப்பட்டுள்ள நிலையில் இடதுபுறம் கலைமானும், காலருகே இருபக்கமும் வீரர்கள் வடிக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறது. இச்சிற்ப அமைதி மற்றும் அணிகலன்களின் கொண்டு இக்கொற்றவை சிற்பம் கி.பி 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.
எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏராளமான கொற்றவை சிற்பங்கள் இப்பகுதியில் ஆவணம் செய்யப்பட்டிருந்தாலும் , இக்கொற்றவையின் தலை மகுடம் எங்கும் காணாத வகையில் தனித்துவமாய் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். சுமார் 1200 வருடம் பழமையான இக்கொற்றவை இன்றும் வயல்வெளியின் மத்தியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.

மேலும் காண

Source link